வாழ்த்துச் செய்தி | 01 APRIL 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை வாழ்த்துகிறேன். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிடமாக இருந்த இப்பொறுப்பில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
இலங்கையில் மலையகப் பகுதிகளில் தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களில் பணி செய்து வருகிற லட்சக்கணக்கான இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக 1939 இல் சிலோன் இந்திய காங்கிரஸ் நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் ஆலோசனையின் பேரில், பண்டித ஜவஹர்லால் நேரு இந்த பகுதிக்கு நேரிடையாக சென்று இவர்களோடு கலந்து பேசி எடுத்த முயற்சியின் பேரில் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் தலைமையில் இந்த அமைப்பு முதலில் தொடங்கப்பட்டது. பிறகு 1950களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இலங்கையில் வாழ்கிற லட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் உரிமை போராட்டத்தை முன்னின்று நடத்தி சமஉரிமை, சமவாய்ப்பு அடிப்படையில் அவர்கள் வாழ்வதற்கு பெரும் துணையாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் வழியில் ஆறுமுக தொண்டமான் பணியாற்றினார். ஆறுமுக தொண்டமான் மறைவிற்குப் பிறகு, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு பெற்றிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இவர் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் மிகுந்த அன்பைப் பெற்றவர்.
மலையகப் பகுதிகளில் வாழ்கிற இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்ற வகையில் திரு.செந்தில் தொண்டமான் பணியாற்றுவார் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது. அவரது தலைமை எடுக்கிற அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.
கே எஸ் அழகிரி