தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

யுகாதி வாழ்த்துச் செய்தி| 01 APRIL 2022

தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்ட தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து குடியேறி தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களாலும்  யுகாதி பண்டிகை மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வாழ்கிற 136 கோடி மக்கள் பல்வேறு மதம், ஜாதி, இனம், மொழி என்ற அடிப்படையில் வாழ்ந்து வந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற அணுகுமுறையின் காரணமாக கடந்த 75 ஆண்டுகளாக ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தியா விளங்கி வருகிறது. ஆனால், இத்தகைய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையில் வகுப்புவாத சக்திகள் வலிமை பெற்று வருவது மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்த யுகாதி திருநாளில் ஜாதி, மத, துவேஷம் கலைந்து மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி தமிழகத்தில் அமைந்திருக்கிறது. இதன்மூலம், இன்று யுகாதி பண்டிகை கொண்டாடும் மொழி சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பும், முக்கியத்துவமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

(கே.எஸ். அழகிரி)