நமது பரப்புரையின் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன். – தலைவர் திரு செல்வப்பெருந்தகை

04-April-2024

அறிக்கை

கடந்த 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இந்த நடவடிக்கையில் அரசியல் குறுக்கீடுகள் இருந்தால், அதையும் முறியடிப்போம்” என்று கூறி பரப்புரை மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களில் முதலில் வெளி வந்தது ரபேல் விமான கொள்முதல் ஊழல். இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூபாய் 41,000 கோடி. ஆனால், எந்தவித விசாரணைக்கும் உட்படுத்த மோடி தயாராக இல்லை. அதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற ரூபாய் 7.5 லட்சம் கோடி ஊழல் முறைகேடுகளை சி.ஏ.ஜி. அறிக்கையாக வெளியிட்டது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அதே சி.ஏ.ஜி. 2ஜி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியதற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமென்று அன்றைக்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடரையே பா.ஜ.க. முடக்கியது. அதற்கு பிறகு பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணை செய்து நடைபெற்ற வழக்கில் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை என்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இன்றைக்கு ரூபாய் 7.5 லட்சம் கோடி ஊழல் முறைகேட்டை சி.ஏ.ஜி. பகிரங்கமாக அறிவித்த பிறகும் இதுகுறித்து விசாரணைக்கு உட்படுத்தவோ, கருத்து கூறவோ உலக மகா உத்தமர் மோடி இதுவரை முன்வரவில்லை.

ஊழலிலேயே மெகா ஊழல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியிருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக விவரங்களை வெளியிடாமல் ஊழலை மூடி மறைத்து விடலாம் என பா.ஜ.க. திட்டம் தீட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் மிக உறுதியாக பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக பட்டியலை பொதுவெளியில் வெளியிட வைத்தது. அந்த பட்டியலில் நன்கொடை அளித்த நிறுவனங்களின் பெயர்களை பார்த்தால் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது அம்பலமாகி வருகின்றன. இன்றைக்கு ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி 45 கம்பெனிகள் குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டிருக்கிறது. இதில் 33 கம்பெனிகள் கடந்த 7 ஆண்டுகளாக பூஜ்ஜிய லாபம் பெறாத 33 கம்பெனிகள் மொத்தமாக வழங்கியது ரூபாய் 576 கோடி. இதில் 75 சதவிகிதமான ரூபாய் 434 கோடி பா.ஜ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 33 கம்பெனிகளின் மொத்த நஷ்ட தொகை ரூபாய் 1 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கிற நிலையில் இந்த கம்பெனிகள் நன்கொடை தொகையை எங்கிருந்து வழங்கியது ? எப்படி பெற்றது ? யார் வழங்கினார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த 33 கம்பெனிகளில் 16 கம்பெனிகள் ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

இந்நிலையில், குறிப்பிட்ட 6 கம்பெனிகள் வழங்கிய ரூபாய் 646 கோடியில் 93 சதவிகிதமான ரூபாய் 601 கோடியை பா.ஜ.க. நன்கொடையாக பெற்றிருக்கிறது. இத்தகைய கம்பெனிகள் ரூபாய் 3.8 லட்சம் கோடி மதிப்புள்ள 179 மிகப்பெரிய அரசாங்க ஒப்பந்தங்களை நன்கொடை வழங்கிய பிறகு பெற்றுள்ளன. அதேபோல, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணைகளை எதிர்கொண்டு வரும் 56 கார்ப்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 2592 கோடி நிதியை வழங்கியுள்ளன. இதில் சோதனைகளுக்கு பிறகு ரூபாய் 1853 கோடி பா.ஜ.க.வுக்கு தரப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட அதிர்ச்சியாக 16 ஷெல் கம்பெனிகள் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 419 கோடி நிதி அளித்துள்ளன.

பா.ஜ.க. அரசு மக்களின் உயிரோடு விளையாடியிருப்பதற்கு சில அதிர்ச்சி தகவல்களும் வெளிவந்துள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தரப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெறாத 7 மருந்து கம்பெனிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்துள்ளன. இதில் ஏறத்தாழ ரூபாய் 1000 கோடி நிதியாக வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் வழங்கிய தரமற்ற மருந்துகளினால் மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு, பல குழந்தைகள் இறக்கிற நிலை கொரோனா காலத்தில் ஏற்பட்டது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே சளி மருந்துகள் மற்றும் ரெம்டெசிவர் போன்ற தரமற்ற மருந்துகளை தயாரித்ததற்காக அமலாக்கத்துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே நிதியமைச்சகத்தின் கருப்பு பட்டியலில் உள்ளது. இந்நிலையில் தான் மனிதாபிமானமே இல்லாமல் பா.ஜ.க. நன்கொடை பெற்றிருக்கிறது.

நன்கொடை பட்டியலை ஆய்வு செய்து வெளியான தகவல்களின்படி நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் அனைத்துமே பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிறுவனங்களை பாதுகாத்து பா.ஜ.க. நன்கொடை பெற்ற பிறகு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமலாக்கத்துறை பாதுகாத்து வருகிறது. ஆனால், அதற்கு மாறாக 2014 முதல் 2022 வரை 121 அரசியல் தலைவர்களை அமலாக்கத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. 2004 முதல் 2014 வரை மொத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 104. ஆனால், 2014 முதல் 2022 வரை 839 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 95 சதவிகிதம் எதிர்கட்சிகள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி ஹவாலா வழிமுறைகளை பின்பற்றிய ஷெல் கம்பெனிகள் மீதோ, தரமற்ற மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீதோ அமலாக்கத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து தன்னாட்சி அமைப்புகளும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்ட உறுப்பு 324 இன்படி தவறான வழிமுறைகளில் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் வங்கி கணக்கை தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு வழி இருக்கிறது. ஆனால், தேர்தல் பத்திர நன்கொடை மூலமாக ரூபாய் 6986 கோடி, அதாவது மற்ற அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையை விட 5 மடங்கு அதிகமாக பெற்ற பா.ஜ.க. மீது தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடியால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.

எனவே, வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான அறிகுறிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நம்பிக்கையோடு தென்படுகின்றன. மக்கள் விரோத அராஜக ஊழல் ஆட்சி நடத்துகிற பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மக்களவை தேர்தலுக்கு பிறகு அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து தேர்தல் பத்திர நன்கொடை உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க.வின் ஊழல்களையும் உச்சநீதிமன்ற கண்காணிப்போடு சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேர்தல் பரப்புரையாக இந்தியா கூட்டணி மேற்கொண்டு வருகிறது. நமது பரப்புரையின் மூலம் உத்தமர் வேடம் தரிக்கும் மோடியின் முகத்திரை கிழிக்கப்படுகிற வகையில் கண் துஞ்சாது, அயராது செயல்பட வேண்டுமென தமிழகத்திலுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.