5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மோசடி செய்த மோடி அரசு – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 04 August 2022

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மோசடி செய்த மோடி அரசு

கடந்த வாரம் மத்திய அரசு அதிவேக செல்போன் சேவைக்காக ஐந்தாம் தலைமுறை  அலைக்கற்றையை பகிரங்கமாக ஏலம் விட்டது . இதில் அரசுக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிட்டும் என மத்திய அமைச்சர்கள் சிலர் ஏலம் நடப்பதற்கு முன்னரே ஆரூடம் கூறினர். ஆனால் சில தினங்களுக்கு முன்பு முடிந்த இந்த ஏலத்தில், மத்திய அரசுக்கு வெறும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்து நூற்று எழுபத்து மூன்று கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிட்டியது என மோடி அரசு அறிவித்திருப்பது நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்கள் இந்த மோசடிக்கு எதிராக கிளப்பும் விமர்சனங்கள் கவனிக்கத்தக்கவை.

ஏற்கனவே 3ஜி, 4ஜி ஸ்பெக்ட்ரம் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது 5ஜி ஏலத்திலும் அரசின் சொந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். பங்கேற்கவில்லை. இதனால் செல்பேசி சந்தையில் பி.எஸ்.என்.எல். பங்கு 10 சதவிகிதமாக குறைந்து மிகப்பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. முழுக்க முழுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் பங்கேற்றன. குறிப்பாக, இதுவரை டெலிகாம் சேவையில் – வணிகத்தில் ஈடுபடாத ஆனால், பிரதமர் மோடியின் உற்ற நண்பரான கௌதம் அதானியின் ஏ.டி.என்.எல். நிறுவனம் இந்த ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இதற்கு மோடியின் பாரபட்ச அணுகுமுறை தான் காரணம்.

முன்னர் 4ஜி  ஸ்பெக்ட்ரம் (380.75 மெகாஹெர்ட்ஸ்) ஏலத்திற்கு விடப்பட்ட போது கிடைத்த வருவாயை ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது 5 ஜி ஸ்பெக்ட்ரம் (51236 மெகாஹெர்ட்ஸ்) ஏலத்தின் மூலம் சுமார் 134 மடங்கு அதிகமான வருவாய் மத்திய அரசுக்கு தற்போது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசுக்கு கிடைத்ததோ வெறும் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. அதாவது, சுமார் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெரும் மோசடி நடந்துள்ளது. மோடி அரசு அதன் குஜராத்தி நண்பர்களுக்காக இந்த மெகா மோசடியை நடத்தி மத்திய அரசின் கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஒரு சில தனியார் டெலிகாம் கம்பெனிகள் இலாபம் அடைய மடைமாற்றி விட்டுள்ளது தெளிவாகிறது.

ஜி.எஸ்.டி. வரிக்கான கட்டணங்களை அத்தியாவசிய உணவுப் பொருட்கள்மீது கடுமையாக உயர்த்தியதன் மூலம் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இவ்வாண்டு சேவை மற்றும் சரக்கு வரி மூலமான வருவாய் 28 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறது. ஆனால், அதன் பணக்கார நண்பர்கள் கொள்ளை இலாபம் அடைவதற்காக அரசுக்கு 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலமாக கிடைத்திருக்க வேண்டிய பல லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. அரசு செல்வந்தர்களின் நலன் காக்கும் – ஏழை எளியோரை வாட்டி வதைக்கும் அரசாக செயல்படுகிறது .

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இன்னமும் பழமையான 2ஜி மற்றும்  3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் அதன் செல்பேசி சேவையை வழங்க நிர்பந்திக்கும் மோடி அரசு, தனியார் நிறுவனங்கள் 4ஜி ஸ்பெக்ட்ரம் வழியாக நவீன செல்பேசி சேவையை வழங்க பத்தாண்டுகள் கழிந்த பிறகும் இன்றுவரை 4ஜி ஸ்பெக்ட்ரம் வழங்க மறுப்பது கண்டனத்துக்கு உரியது. டெலிகாம் துறையில் இதுவரை தடம்பதிக்காத குஜராத் செல்வந்தர் அதானியின் கம்பெனிக்கு நேரிடையாக 5ஜி ஸ்பெக்ட்ரத்தை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்திருப்பது மோடி அரசின் பெரும் மோசடி. இதன்மூலம் குறிப்பிட்ட ஒருசில பணக்காரர்களின் நலனுக்காக, மத்திய அரசின் வருவாய்க்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற தீய நோக்கில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. வின் திட்டப்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு நடந்ததாக பொய்ப் பிரச்சாரம் நடத்தி 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக வினோத் ராய் இட்டுக்கட்டி அறிக்கை வெளியிட்டார். இதற்காக அவருக்கு மோடி அரசில் உயர் பதவி வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு அனுமானத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்தை பா.ஜ.க. உள்ளிட்ட அன்றைய எதிர்கட்சியினர் மூடிமறைத்து பிரச்சாரம் செய்தனர். இதை ஊழலாக சித்தரிப்பதில் எதிர்கட்சிகளும், ஊடகங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டன. இதன்மூலம், நாடாளுமன்றத்தை மாதக்கணக்கில் முடக்கி அழிச்சாட்டியம் நடத்திய அன்றைய பா.ஜ.க., இன்று  5 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான ஏலத்தில் செய்துள்ள மெகா மோசடி குறித்து இன்றைய மோடி அரசு மிகப்பெரிய விசாரணையிலிருந்து தப்ப முடியாது. பா.ஜ.க.வின் இந்த முடிவு நீதிமன்றத்தின் ஆய்வுக்கு நிச்சயம் உட்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி, எதிர்கட்சிகளை முடக்கி, ஒடுக்கி விடலாமென மோடி அரசு திட்டம் தீட்டி செயல்படுகிறது. அந்த அடிப்படையில் தான் நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தோடு தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பா.ஜ.க.வின் பிரதான எதிர்கட்சியான காங்கிரசின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என மோடி கனவு காண்கிறார். அவரது கனவு நிச்சயம் பலிக்காத வகையில் விரைவில் நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.

கே எஸ் அழகிரி