2024 மக்களவை தேர்தலில் மோடி ஆட்சியை அகற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அணி திரண்டு நிற்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல் காந்தி தம்மை வருத்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டு மாபெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரது உழைப்பிற்குப் பலன் தருகிற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றுகிற காலம் வெகு தொலைவில் இல்லை. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

05-March-2024

அறிக்கை

இந்தியாவிலேயே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலிமை பெற்றிருப்பதால் கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி என்பது கானல் நீராகிவிட்டதை அறிந்த பிரதமர் மோடி அடிக்கடி தமிழக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் கோபம் கொப்பளிக்கிறது, பதற்றம் அதிகரிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு எதிராக பிரதமர் பதவியில் இருக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவதூறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவதை மூடி மறைக்கின்ற வகையில் அவரது உரை அமைந்திருந்திருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தியும் சர்வ அதிகாரம் படைத்த பிரதமர் மோடியோடு மேடையில் அமர ஒருநபர் கட்சிகளைத் தவிர,எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரதமர் மோடி, தி.மு.க., காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறார்.

இந்தியாவை உலகின் மூன்றாவது தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் ஆக்க வேண்டுமென்று 10 ஆண்டு ஆட்சிக் காலம் முடிந்து தேர்தலை எதிர்நோக்கும் போது கூறுகிறார். கடந்த 2019 சுதந்திரதின விழாவில் உரையாற்றிய மோடி, 2024 இல் 5 டிரில்லியன் டாலராக உயர்ந்து உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்துவேன் என்று கூறினார். தற்போது அந்த இலக்கை 2025 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறார். மோடியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 6 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிற போது 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எப்போது அடையப் போகிறார் என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அந்த வளர்ச்சியை அடைய வேண்டுமானால் இருமடங்கு வளர்ச்சி விகிதத்தை நாடு அடைய வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பற்றிப் பேசுகிற பிரதமர் மோடி தனிநபர் வருமானம் ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரமாகக் குறைந்திருப்பது குறித்து பேசுவதில்லை. அதேபோல, கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் 117 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையும், உலக பசி குறியீட்டின்படி 125 நாடுகளின் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இலங்கை 60-வது இடத்திலும், பாகிஸ்தான் 102-வது இடத்திலும் இருப்பதை விட இந்தியாவிற்கு வேறு அவமானம் இருக்க முடியாது.

அதேபோல, வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 20 முதல் 24 வயது நிரம்பிய பட்டதாரிகளிடையே 44.5 சதவிகிதமும், 25 முதல் 29 வயதுள்ளவர்களிடையே 14.33 சதவிகிதமும் உள்ளது. கடந்த ஆண்டு ரயில்வே துறையில் 90,000 கீழ்நிலை பணியாளர்களுக்கு நடந்த தேர்வில் 2 கோடியே 80 லட்சம் பேர் பங்கெடுத்திருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

தி.மு.க. அரசு வெள்ள மேலாண்மையை சரிவரச் செய்யவில்லை, துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்று மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 37 ஆயிரம் கோடி நிதி கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டனர். ஜனவரி 27 ஆம் தேதிக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார். ஆனால் தமிழகத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி இதுவரை ஒரு சல்லிக் காசு கூட வழங்கவில்லை.

மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று உரத்தக் குரலில் கூறியிருக்கிறார். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை நிறைவேற்றிய திட்டங்களை ஆய்வு செய்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தியிருக்கிறார். நெடுஞ்சாலைத்துறை திட்டத்தில் ரூபாய் 7.5 லட்சம் கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. துவாரகா நெடுஞ்சாலை வரைவு திட்டத்தில் ஒரு கி.மீ. தூரத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூபாய் 18 கோடி. ஆனால், இறுதியில் செலவானதோ ரூபாய் 250 கோடி. திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது. இதனால் பயனடைந்தவர்கள் யார் ? நாடு முழுவதும் 650 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்து அதில் விதிகளுக்குப் புறம்பாக ரூபாய் 132 கோடியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஒட்டிகளிடம் அதிகமாக வசூல் செய்ததாக சி.ஏ.ஜி. குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் பரனூர் சுங்கச்சாவடியில் சி.ஏ.ஜி. ஆய்வு செய்ததில் ரூபாய் 6.5 கோடி அளவுக்கு முறைடுகள் நடந்துள்ளதாக கூறியிருக்கிறது. நாட்டிலுள்ள 650 சுங்கச்சாவடிகளையும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்தால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருக்குமோ என்ற பேரதிர்ச்சி ஏற்படுகிறது.

அன்று 2ஜி குற்றச்சாட்டில் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி கூறியதை வைத்து இரண்டு தேர்தல்களில் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதி என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், 7.5 லட்சம் கோடி முறைகேடுகள் குறித்து இதுவரை எந்த விசாரணையோ, வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரமோ மோடி ஆட்சியில் இல்லை. உலகம் போற்றும் உத்தமர் மோடி என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உத்தமர் ஆட்சியில் ஊழல் எவ்வளவு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்துவதாக மோடி கூறுகிறார். விடுதலை போராட்ட காலத்தில் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருமே ஒருகட்டத்தில் சிறையிலிருந்து விடுதலைக்காகப் போராடினார்கள். விடுதலைக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரம்பரியத்தில் வந்த பிரதமர் மோடி விடுதலைக்காக காந்தியடிகள் தலைமையில் 60 ஆண்டுகள் போராடிய காங்கிரஸ் பேரியக்கம் குறித்துப் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் மோடி வளர்க்கப்பட்டாரோ, அதனுடைய தலைமை நிலையத்தில் 52 ஆண்டுகள் தேசியக் கொடியை ஏற்றாத தேசவிரோத இயக்கத்தால் வளர்க்கப்பட்டவர் தான் மோடி. இந்தப் பின்னணியில் உள்ள மோடி, காங்கிரஸ் கட்சிக்கு உபதேசம் செய்ய எந்த உரிமையும் இல்லை.

2024 மக்களவை தேர்தலில் மோடி ஆட்சியை அகற்ற தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அணி திரண்டு நிற்கிறது. மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்ற தலைவர் ராகுல் காந்தி தம்மை வருத்தி நடைப்பயணம் மேற்கொண்டு மக்களோடு மக்களாக அவர்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டு மாபெரும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அவரது உழைப்பிற்குப் பலன் தருகிற வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றுகிற காலம் வெகு தொலைவில் இல்லை.

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.