06-March-2024
அறிக்கை
உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் வழக்குரைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் என 24 பேர் 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சூழ்நிலையில், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை நேரடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதலைப் பெறாமல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பெரும் பிரிவு 348 உட்பிரிவு இரண்டின் படி நிறைவேற்றாமல், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும் என்ற தேவையற்ற ஒரு நடைமுறையை உண்டாக்கி இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இந்தி பேசாத மாநில மக்களின் நீதி பெறும் உரிமை என்னும் அடிப்படை உரிமையைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மறுத்து, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழக்கறிஞர்கள் போராட்டத்தை நடத்த முடிவு செய்து தொடர்ந்து எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவர்களின் உடல் நலிவுற்று இருப்பதும், இருவர் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதும் உள்ளபடியே கவலையை உண்டாக்குகிறது.
இந்த அறப்போராட்டத்தை ஒருதுளியும் மதிக்காமல் புறந்தள்ளி வரும் ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. உறுதியாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் எனும் மிக உயரிய – அடிப்படையான இந்தக் கோரிக்கைக்காகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபட்டு தேவையற்ற சிக்கல்களைத் தீர்த்து நடைமுறைப்படுத்தும். இதில் வழக்கறிஞர்களுக்கு எந்த ஐயமும் வேண்டாம். காங்கிரஸ் கட்சி உறுதியாக உங்களின் – தமிழ் நாட்டின் கோரிக்கையான உயர்நீதிமன்றத்தில் தமிழைக் கொண்டு வருவோம் என உறுதியளிக்கிறது.
ஆகவே, வழக்கறிஞர் பெருமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தமிழைக் கொண்டு வர நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.