மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

06-April-2024

அறிக்கை

பா.ஜ.க. ஆட்சியில் ஊழலை அணு அளவும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி பலமுறை கூறிவந்த நிலையில் ரபேல் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், தேர்தல் பத்திர நன்கொடை மெகா ஊழல் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஊழலின் உச்சத்தை தொடுகிற வகையில் பி.எம். கேர்ஸ் மோசடி ஊழல் பரபரப்பாக அம்பலமாகி உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடையில் பா.ஜ.க. பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வழிமுறைகளில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூல் செய்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகியிருக்கிறது.

பி.எம்.கேர்ஸ் என்ற நிதி எதற்காக தொடங்கப்பட்டது ? யாருக்காக தொடங்கப்பட்டது ? இதற்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் ? இதை நிர்வகிப்பவர்கள் யார் ? என்பது எதுவுமே வெளியே தெரியாமல் பூடகமாக மறைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடையில் எத்தனை வகையான ரகசியம் பின்பற்றப்பட்டதோ, அதைப் போலவே பி.எம்.கேர்ஸ் நிதி திரட்டலிலும் கையாளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரதமரின் மேற்பார்வையில் நிதியை அவர் யாருக்கு வழங்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை தன்னிச்சையாக வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் பணம் கொடுத்தார்கள் ? எவ்வளவு கொடுத்தார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்படுகிற துணிவுமிக்க சில ஊடகங்கள் இதை பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கின்றன. அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட நன்கொடை பட்டியலின்படி பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரிலையன்ஸ் குழுமம் ரூபாய் 500 கோடி, அதானி குழுமம் ரூபாய் 100 கோடி, பேடிஎம் ரூபாய் 500 கோடி, ஜிண்டால் ஸ்டீல் குழுமம் ரூபாய் 100 கோடி என பட்டியல் நீளுகிறது.

பி.எம்.கேர்ஸ் நிதியை பொறுத்தவரை சி.ஏ.ஜி. மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கட்டுப்பட்டதல்ல. இதற்கு கூறப்படுகிற காரணம் இதற்கான நிதி ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், பிரதமரே முன்னின்று வசூல் வேட்டை நடத்துவதால் எந்த விவரத்தையும், எவருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதிக்கும், அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிற அதேநேரத்தில் ஒன்றிய அரசினால் நடத்தப்படுகிற 38 பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் ஏறத்தாழ ரூபாய் 2105 கோடி வழங்கியிருக்கிறது. இதைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ரூபாய் 150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு நமது நாட்டின் நாடாளுமன்றம் தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி, பிரதமர் நிவாரண நிதி என்ற பெயர்களில் சட்டப்படி மூன்று அமைப்புகளை ஏற்படுத்தி அவசர காலத்திற்கான நிவாரண நிதியாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இதன் நோக்கம் புயல், மழை, வெள்ளம், வறட்சி, விபத்துகள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அமைப்புகளின் வரவு-செலவு கணக்குகள் யாவும் அரசு கணக்கு தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்யப்பட்டு பொதுமன்றத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் பி.எம்.கேர்ஸ் என்ற நிதியம் இந்திய அரசாங்கத்தின் இணைய முகவரி பெயரிலும், பிரதமர் அசோகத் தூண் ஆகியவற்றை அடையாளமாக கொண்டிருப்பதாலும் இது இந்திய அரசையே முன்னிறுத்துகிறது. அரசு அதிகாரிகளால் விளம்பரம் செய்யப்படுகிறது. அரசு நிர்வாகம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் கணக்கு, வழக்குகளை கேட்டால் மட்டும் இது தனியார் அறக்கட்டளை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இதற்கு பொருந்தாது என்று விதண்டாவாதம் பேசப்படுகிறது. இதை ஒரு அறக்கட்டளையாக காட்டப்படுவதால் இதற்கு வருமான வரித்துறை 100 சதவிகித வரிவிலக்கு அளித்திருக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகிற வகையில் வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக, அண்டை நாடான சீன நாட்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது வெளிவந்துள்ளது. இதில் சீன நாட்டை சேர்ந்த டிக்டாக் ரூபாய் 30 கோடி, ஷாவ்மி ரூபாய் 10 கோடி, ஹ{வாய் ரூபாய் 7 கோடி, ஒன்பிளஸ் ரூபாய் 1 கோடி என்று நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. அண்டை நாடான சீன நாட்டுடன் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் நமது எல்லைகளில் ஊடுருவி பதற்றமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிற வேளையில் இத்தகைய நிதிகளை பிரதமர் மோடி எப்படி பெற்றார் என்பதற்கு உரிய விளக்கத்தை அவர் தர வேண்டும்.

நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்தவிதமான சட்ட ஒப்புதலுமின்றி ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் நிதி திரட்டி, தன்னிச்சையாக செலவு செய்வதை விட மிகப்பெரிய ஊழல் என்ன இருக்க முடியும் ? நாட்டின் உயர்ந்த அதிகார மையமாக இருக்கிற பிரதமர் அலுவலகம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதும், பிரதமர் தன் விருப்பம் போல் தன்னிச்சையாக நிதி வழங்குவதும் அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இதில் பொறுப்புடைமை இல்லை. தணிக்கை இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலவித சந்தேகங்களுக்கு இடம் தருகிற வகையில் அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பரப்புரையில் மோடி ஒரு மகா உத்தமர் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொறுத்தவரையில் நாம் எழுப்பியிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும். இதற்கு பதில் கூறாமல் விதண்டாவாதம் பேசுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊழலே உன் பெயர் தான் நரேந்திர மோடியா என்று மக்கள் கூறுகிற அளவிற்கு ஊழலின் ஊற்றுக் கண்ணாக பா.ஜ.க. அரசு செயல்பட்டிருக்கிறது. ஊழலுக்கு மேல் ஊழல் வெளிவந்து கொண்டிருக்கிறது. சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்த்துகிற வகையில் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி.

– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.