தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்..- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

06-Sep-2024

அறிக்கை

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் ஒரு பேச்சாளர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் பகுத்தறிவுக்கு விரோதமாக கருத்துகளை கூறியிருக்கிறார். கல்வியறிவை வளர்க்க வேண்டிய பள்ளிகளில் மூட நம்பிக்கையை வளர்ப்பவர்கள் சமூக அக்கறையில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள். அங்கே உரையாற்றிய பேச்சாளர் குறிப்பிட்ட மத உணர்வை தூண்டுகிற சனாதன கருத்துகளை பகிரங்கமாக மாணவிகள் மத்தியில் கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

தமிழகத்தில் சமீபகாலமாக வகுப்புவாத சக்திகள் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஊடுருவ முயற்சிப்பதை தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் அனுமதிக்க முடியாது. அனைத்து மதங்களுக்கும் பொதுவான இடமாகவே பள்ளிகள் இருக்க வேண்டும். போன ஜென்மத்தில் எதை செய்கிறீர்களோ, அதனுடைய பலனைத் தான் இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்று அறிவியலுக்கு விரோதமாக அந்த குறிப்பிட்ட பேச்சாளர் மாணவிகளிடையே பேசியிருப்பதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. எல்லாவற்றையும் பிறப்பின் அடிப்படையில் தான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனவே, தமிழக கல்வித்துறையில் வகுப்புவாத மற்றும் பகுத்தறிவுக்கு விரோதமான கருத்துகள் கூறுவதை தடுக்கிற வகையில் உரிய நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மாணவ – மாணவிகளிடையே இத்தகைய நச்சு கருத்துகள் கூறுவது அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய பேராபத்தை தமிழகம் எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.