தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது… – தலைவர் திரு கே எஸ் அழகிரி

08 SEP 2021

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, கடந்த 2 ஆண்டுகளாக இந்திய முஸ்லீம் மக்களைப் பதற்றமான மனநிலையில்  மத்திய அரசு வைத்திருக்கிறது. இந்த சட்டத்தை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி,  தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை என்ற கருத்தை முதலமைச்சர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற அவரது கருத்து, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்தாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டுக்கு அகதிகளாக வருவோரைப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துள்ளது என்ற அவரது வாதத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உள்ளது.  மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும் அதனைப் பரப்பவும் உரிமை உண்டு. அந்த உரிமையை மறுப்பது சட்டவிரோதமானதாகும்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. பெரியார், காமராஜர் பிறந்த மண்ணில் தீர்மானம் வடிவில் கடுமையான எதிர்ப்புக்குரல் வந்திருப்பது, தேசிய அளவில் விழிப்புணர்வையும், ஆதரவையும் உருவாக்குவதற்குக் காரணமாக அமையும் என்பது உறுதி.

கே.எஸ். அழகிரி