அறிக்கை 08 Nov 2021
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோர் 1 இல் தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை எதிர்நோக்கி தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றியதால் வெள்ள நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, பாதிப்புகள் அதிகளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக வெள்ள பகுதிகளுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளை பிறப்பித்து, நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டதற்காக அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதன்மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 2015 இல் பெய்த கடும் மழையின் காரணமாக அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நவம்பர் 17 ஆம் தேதி 18,000 கனஅடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்து விடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவதற்கும், உடமைகள் இழப்பு ஏற்படுவதற்குமான அவலநிலை ஏற்பட்டது. அத்தகைய நிலை ஏற்படாமல் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற நீர்த் தேக்கங்களில் இருந்து உரிய நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் படிப்படியாக திறந்து விடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சென்னை மாநகர மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து முற்றிலுமாக பாதுகாத்திருக்கிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக அக்டோபர் 1 முதல் 7 ஆம் தேதி வரை இயல்பு நிலையை விட 43 சதவிகிதம் கூடுதல் மழை பெய்திருக்கிறது. 36 மாவட்டங்களில் அதிக மழை பெய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. சென்னை வானிலை ஆய்வாளர் கூற்றின்படி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் கன, மிக கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்குகிற பணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஈடுபட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்கிற பணியில் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதிகளுக்கு சென்று அரசு அதிகாரிகளோடு இணைந்து, நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக போய்ச் சேருவதை உறுதி செய்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் துணைபுரிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி