பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 09 APRIL 2022

பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார்கள். மேலும் வறுமையில் வாடுகிற மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக நாள்தோறும் மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக உயர்த்தி வருகிறது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 110.85, டீசல் ரூபாய் 100.94 ஆகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாக பா.ஜ.க. காரணம் கூறுகிறது. ஆனால், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்த போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 108 டாலராக இருந்தது. எனினும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71.41, டீசல் ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இதற்குக் காரணம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி ரூபாய் 9.20, டீசலுக்கு ரூபாய் 3.46 ஆகவும் இருந்தது தான். மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் கூட்டணி அரசு 2013-14 ஆம் ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடி மானியம் வழங்கியது. இதனால் தான் பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலை குறைவாக விற்கப்பட்டது.

கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு ரூபாய் 18.70, டீசலுக்கு ரூபாய் 18.34 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த கலால் வரி உயர்வு பெட்ரோலில் 203 சதவிகிதமாகவும், டீசலில் 531 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை பலமுறை உயர்த்தியதன் காரணமாக ரூபாய் 26 லட்சம் கோடியை மோடி அரசு வருவாயாக நிரப்பிக் கொண்டது. கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் விலை ரூபாய் 29.02 ஆகவும், டீசல் விலை ரூபாய் 27.58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி அரசுக்கு மக்கள் மீது ஈவு இரக்கமோ, மனிதாபிமான உணர்வோ இல்லை என்பதற்கு இந்த விலை உயர்வே சரியான சான்றாகும்.

அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2014 ஆம் ஆண்டில் 410 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அதன் விலை ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது. மோடி ஆட்சிக் காலத்தில் மட்டும் 540 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினால் 20 கோடி தாய்மார்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாறு காணாத பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையிலிருந்து மக்களை மீட்பதற்கான எந்த தீர்வையும் காண மோடி அரசு தயாராக இல்லை.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இதற்கான வரிவிதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுந்தன. ஆனால், மாநில அரசுகள் மீது பழியைப் போட்டுவிட்டு இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். பெட்ரோலியப் பொருட்கள் மீது கலால் வரி விதித்து கஜானாவை நிரப்பும் மோடி அரசு இதை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.  பெட்ரோல், டீசலுக்கான வரி விதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பலமுறை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஆனால், இக்கோரிக்கையை ஏற்றால் பெட்ரோல், டீசல் விலை 50 சதவிகிதம் குறைக்கப்படுகிற வாய்ப்பு ஏற்படும். இதை நிறைவேற்றுகிற வகையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் ஆதரவைப் பெறுவதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்போடு செஸ் வரியையும் ஒன்றிய அரசு விதித்து வருகிறது. செஸ் வரி மூலம் வருகிற வருமானத்தை மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ள ஒன்றிய அரசு தயாராக இல்லை. செஸ் வரியை மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டால் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரலாம் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்த பரிந்துரையை ஒன்றிய நிதியமைச்சர் ஏற்கத் தயாராக இல்லை. இதன்மூலம் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு காரணமாகவே பெட்ரோல், டீசல் வரி விதிப்பு ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை ரெட்கிராஸ் மாளிகை அருகிலிருந்து சென்னை நோக்கி பாத யாத்திரை நடைபெறுகிறது. 550 கி.மீ. தூரமுள்ள பாதயாத்திரை 56 தோழர்களுடன் 18 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களின் ஆதரவைத் திரட்டுகிற வகையில் நடைபெறவுள்ள இந்த பாதயாத்திரையை நான் துவக்கி வைக்க இருக்கிறேன்.

எனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் பாதயாத்திரை செல்லும் பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பேராதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கே எஸ் அழகிரி