அறிக்கை | 11 APRIL 2022
இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. கே.வீ.தங்கபாலு அவர்களை தலைவராகவும், துணைத்தலைவர் திரு. பொன்.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கன்வீனராகவும் கொண்டு தமிழகத்தில் விழாக்குழு அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கெங்கு நடைபெற்றதோ அதை மீண்டும் நினைவுகூறுகிற வகையில் அந்தந்த இடங்களிலெல்லாம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இக்குழு முடிவு செய்திருக்கிறது.
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டு உப்பு எடுக்கிற போராட்டம் நடைபெற்றது. இதுவே இந்திய விடுதலையின் தொடக்கமாக இருந்தது. அதேபோல், அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தலைமையில் திருச்சியிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு பெருமையுடன் சான்றுகளாக இன்றளவும் உள்ளன.
இந்நிலையில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அன்று நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மீண்டும் நினைவுகூறுகிற வகையில், திருச்சியிலிருந்து வேதாரண்யம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா எனது தலைமையில் நடைபெறவுள்ளது. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தோழர்களுடன் திரு. கே.வீ.தங்கபாலு அவர்கள் ஏற்பாட்டில் வேதாரண்யம் நோக்கி நடைபெறும் இந்த பாதயாத்திரையை, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இத்தொடக்க விழாவில், திருச்சி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திரு. சு.திருநாவுக்கரசர் அவர்கள் முன்னிலை வகிக்கிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் ஒரிசா மாநில பொறுப்பாளர் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சி.டி. மெய்யப்பன், திரு. கிறிஸ்டோபர் திலக், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் திரு. மயூரா ஜெயக்குமார், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு நடைபயணம் 18 நாட்களில் 230 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க இருக்கிறது. இந்த நடைபயணத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களின் வரலாற்றையும், தியாகங்களையும் மக்களிடையே மீண்டும் நினைவு கூறுகிற வகையில் தீவிரமான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும். இந்திய விடுதலைப் போராட்டம் என்பது மகாத்மா காந்தியின் தலைமையில் அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்ற பெருமைமிக்க நிகழ்வுகள் என்பதை மக்கள் மனத்தில் பதிய வைக்கிற வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நடைபயணம் வெற்றிகரமாக நடைபெற திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நடைபயணம் 9 மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களின் சீரிய ஏற்பாட்டின் பேரில் நடைபெற இருக்கிறது.
இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி, சிறைக் கொடுமைகளை அனுபவித்து, விடுதலையைப் பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. அத்தகைய மகத்தான போராட்டத்தில் தமிழகத்தில் பங்கெடுத்துக் கொண்ட உன்னதத் தலைவர்களின் தியாகத்தைப் போற்றுகிற வகையில் அமையும். இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக அமைந்திட காங்கிரஸ் கட்சியினர் ஒத்துழைப்பையும், பொதுமக்கள் பேராதரவினையும் வழங்கிட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.