தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி | 13 APRIL 2022

சித்திரை மாதத்தை தமிழர்கள் இன்று வரை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். நமது கொண்டாட்டத்தில் கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியியல் ஆகியவை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருவதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சமீப காலமாகத் தமிழர்கள் மீதும், தமிழக கலாச்சார, பண்பாட்டின் மீது படையெடுப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது. இதனை ஜனநாயக ரீதியாக மக்கள் போராடி முறியடித்தும் வருகிறார்கள். அதோடு, தமிழர்களின் எதிரிகள் அடையாளம் காணப்பட்டு, வாக்குரிமை மூலம் ஒதுக்கப்பட்டு வரும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களிலும், ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அமோக ஆதரவோடு தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் நல்லாட்சி அமைந்திருக்கிறது. மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றாலும் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கே.எஸ். அழகிரி