காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

09-May-2024

அறிக்கை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறாததை எல்லாம் இட்டுக்கட்டி கூறி திரிபு வாதங்களை முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, தற்போது புதியதொரு நச்சு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார். எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கைவந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வாழ்கிற சாம்பிட்ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக்கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீகமற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பா.ஜ.க. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் ஏப்ரல் 7, 2017 அன்று மோடியின் இன்றைய நச்சு கருத்துக்கு ஏற்ப ‘இனவெறியை நாங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தென்னிந்தியாவில் தமிழர்கள் உள்ளிட்ட கருப்பர்களுடன் நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும் ?” என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருந்தார். அதே கருத்தின் அடிப்படையில் தான் மோடியின் நச்சு கருத்து அமைந்திருக்கிறது. இத்தகைய கருத்துகளின் மூலம் அன்று தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை இழிவுபடுத்தியதைப் போல பிரதமர் மோடி மீண்டும் தற்போது அதே கருத்தை வலியுறுத்தி இழிவுபடுத்தியிருக்கிறார். இதற்காக தமிழக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர, பிரச்சினையை திசைத்திருப்பி கபட நாடகம் ஆடக் கூடாது.

ஆப்பிரிக்கர்கள் போல் தென்னிந்தியர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்தை விமர்சிக்கிற பிரதமர் மோடி, நிற பாகுபாடு அரசியலுக்கு ஆதரவாக தூபம் போட்டு வருகிறார். இனவாத, இனஒதுக்கல் அரசியலில் இருந்து ஆபிரகாம் லிங்கன், மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பாகுபாடு காட்டிய நிறவெறி அரசியலை எதிர்த்து தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்கள். அதன் பின்னணியில் தான் ஆப்பிரிக்க மக்களின் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை நெல்சன் மண்டேலா அவர்கள் 28 ஆண்டுகாலம் சிறையில் இருந்து போராடி வெற்றி பெற்று இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்பிரிக்காவை மக்களாட்சியின் கீழ் கொண்டு வந்தார். அதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அதேபோல, அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவராக பராக் உசைன் ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று மகத்தான சாதனை புரிந்தார். இவர்கள் அனைவருமே மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவரை தங்களது உதாரண புருஷராக கருதியவர்கள்.

அதேபோல, அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா அவர்கள் 2010 இல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத்தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூர்வது அவசியமாகும். அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவுபடுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக்கட்டிஅபத்தமான வாதங்களை கூறி வருகிறார்.

இதன்மூலம் 10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள். இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ