10-April-2024
அறிக்கை
ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒற்றை ஆட்சியின் மூலம் தமது அலுவலகத்தில் அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற நடவடிக்கைகளிலும், எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய அமைப்புகளை தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள், விசாரணைகள், சோதனைகள் என தொடர்ந்து நடத்தி அதன்மூலம் அவர்களது செயல்பாடுகளை முடக்குகிற பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்மூலம் கட்சித் தாவல் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அஜித் பவார், பிரபுல் படேல், சுவேந்து அதிகாரி உட்பட சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை தொடுத்த வழக்குகளில் சிக்கிய 25 எதிர்கட்சித் தலைவர்கள் பாரதிய ஜனதா கட்சியிலோ அல்லது அதன் கூட்டணியிலோ சேர்ந்துள்ளனர். இவர்களில் 23 பேரில் 3 பேர் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் மீதான வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி முறைகேடு தொடர்பாக 2019 ஆகஸ்ட் மாதம் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் மீது வழக்கு பதிவு செய்தது. ரூபாய் 70,000 கோடி நீர் பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் ஜூலை 2023 இல் பா.ஜ.க. கூட்டணி அரசில் இணைந்து துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார். 2024 ஜனவரியில் அவர் மீதான வழக்குகளை முடித்து வைப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநில முதல்வராக உள்ள ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது 2014 இல் சாரதா சிட்பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தன. 2015 ஆகஸ்ட் மாதம் பிஸ்வாஸ் சர்மா பா.ஜ.க.வில் இணைந்து முதலமைச்சர் ஆன பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வழக்கு விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 111 விமானங்களை வாங்கியதில் முறைகேடு குறித்து 2017 இல் மத்திய புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதில் மே 2019 இல் இவரது பெயரை அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் 2023 ஜூன் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த பிறகு 2024 மார்ச் மாதத்தில் வழக்கை மூடுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதேபோல, சகன் புஜ்வால் 2006 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது ரூபாய் 100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் முறைகேடாக வழங்கப்பட்டதாக 2015 இல் மாநில ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. 2016 மார்ச் மாதத்தில் பண பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்து இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். பிறகு ஜாமீனில் விடுதலையான இவர், ஜூன் 2023 இல் அஜித் பவாருடன் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அமைச்சரானார். தற்போது அமலாக்கத்துறை அவரது வழக்கை கிடப்பில் போட்டிருக்கிறது.
இதேபோல், ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்ட அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்தவுடனே மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மேலும், திகம்பர் காமத், நவீன் ஜிண்டால், அர்ச்சனா படேல், கீதா கோடா, பாபா சித்திக், ஜோதி மிர்தா உட்பட 25 பேர் மீது ஊழல் வழக்கு இருந்தும், விசாரணை அழுத்தத்தில் இருந்தும் விடுபடுவதற்கு பா.ஜ.க.வில் இணைந்து விட்டனர்.
ஊழல் கறை படிந்தவர்களை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷினாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. எவர் மீது ஊழல் வழக்கு இருக்கிறதோ, அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்ததும் புனிதமானவர்களாக மாறி விடுகிறார்கள். இந்த அணுகுமுறையில் பா.ஜ.க. ஒரு வாஷிங் மெஷினாக செயல்பட்டு வருகிறது. இதுதான் பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாகும். ஊழலுக்கு துணை போகிற பிரதமர் மோடியின் ஊழல் ஒழிப்பு நாடகம் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று சென்னை மாநகரில் தியாகராய நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பாண்டி பஜாரில் பிரதமர் மோடி வாகன அணிவகுப்பு நடத்தினார். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை என பா.ஜ.க.வினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற பாசம் கொண்டிருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். தமிழ் மொழியை புறக்கணித்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி வழங்கி பாரபட்சம் காட்டுகிற பிரதமர் மோடியை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். அதேபோல, சென்னை மாநகரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது நிவாரண நிதியாக ரூபாய் 37,000 கோடி கேட்டதில் இதுவரை ஒரு சல்லிக்காசு கூட பிரதமர் மோடி வழங்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக கருத முடியாது என நிர்மலா சீதாராமன் கூறி, நிதி வழங்க மறுத்து விட்டதை தமிழ் மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் 2024-25 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் உத்தரபிரதேசம் 18 சதவிகிதம், தமிழ்நாடு 4 சதவிகிதம், கர்நாடகா 3 சதவிகிதம், தெலுங்கானா 2 சதவிகிதம், கேரளா 1 சதவிகிதம் என ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கிற போது உத்தரபிரதேசத்திற்கு ஒரு நீதி, தென் மாநிலங்களுக்கு ஒரு நீதி என்ற வகையில் பா.ஜ.க.வின் வஞ்சிக்கிற அணுகுமுறையை தெளிவாக புரிந்து கொள்ளலாம். எனவே, தமிழ்நாட்டில் எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.
– தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.