நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத்தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.- தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 10 October 2022

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று சொல்லியிருக்கிறார். ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு குறளையும் படித்து அதனுடைய பொருளை புரிந்து கொள்ள முயற்ச்சித்து வருவது வரவேற்க்கத்தக்கது. திருக்குறளை ஆழ்ந்து படிப்பதன் மூலமாக மனித குலத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை. ஆன்மிகம் என்பதை புரிந்து கொள்வதில் ஆளுநருக்கு சற்று சிரமம் இருக்கும் என்று கருதுகிறேன். ஆன்மிகம் என்பது மதத்தில் இருந்து அப்பாற்பட்டது. மதம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவை, குறிப்பிட்ட இறை வழிபாட்டை, குறிப்பிட்ட கடவுளை அமைப்பு ரீதியாக பின்பற்றுவதும், அந்த நோக்கங்களுக்காக எந்த கடுமையான செயலை செய்வதற்கும் மதம் ஒரு தூண்டு கோலாக அமையும். அதற்கான உதாரணங்கள் வரலாற்றில் ஏராளம் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சிலுவை போர்கள், மாபெரும் மதமாற்றங்கள், வைணவத்திற்கும், சைவத்திற்கு நடந்த மாபெரும் உயிரிழப்புகள், சமயத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் நடைபெறுகிற வன்மம் நிறைந்த போராட்டங்கள் என இவை அனைத்திற்கும் பின்புலமாக இருப்பது மத அமைப்புகளே. இந்த வரலாறு உலகம் முழுவதும் அறிந்த ஒன்று.

ஆன்மிகம் அதுவல்ல. அதற்கு ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை தன்னை விடவும் ஒரு உயர்ந்த சக்தி பிரபஞ்சத்தில் இருப்பதாகவும், அந்த சக்தியின் மீது நம்பிக்கையும், பற்றும் வைப்பது மனிதனுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும், ஆனால் அந்த சக்திக்கு உருவம் கொடுப்பதோ அல்லது பெயரிடுவதோ அல்லது அமைப்பு ரீதியாக அதை உருவாக்குவதோ ஆன்மிகத்தினுடைய பண்பு அல்ல. ஒரு சிறந்த ஆன்மிகவாதி, தான் கடந்து செல்கிற பாதையில் வருகிற எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ளாமல் அதன்மீது வன்மம் பாராட்டாமல் மனம் திறந்து, தலை வணங்கி, மரியாதை செய்துவிட்டு செல்வது தான் ஆன்மிகத்தின் பண்பு. அது மிகுந்த மன அமைதியையும், மனித மாண்பையும் கொடுக்கக் கூடியது. மிருக நிலையிலிருந்து மனித நிலையையும், மனித நிலையிலிருந்து இறை  நிலையையும் அடைகிற மாபெரும் பயணம் தான் ஆன்மிகத்தின் இலக்கு.

இதைத் திருவள்ளுவர் மிக நன்றாக அறிந்து தன்னுடைய திருக்குறளை அமைத்திருக்கிறார். அதில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ, மன்னர்களைப் பற்றியோ அல்லது அன்று வாழ்ந்த வள்ளல்களைப் பற்றியோ குறிப்பிடுவதே கிடையாது. எனவே தான், அது உலகின் பொதுமறையாக கருதப்படுகிறது. நீங்கள் புரிந்து கொண்டிருக்கிற ஆன்மிகம் என்பது ஏதாவது ஒரு மதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் திருக்குறளை எவ்வளவு அலசி ஆராய்ந்துப் பார்த்தாலும் உங்களுக்கு அது கிடைக்காது.

நீங்கள் திருக்குறளை படிக்கிற ஆர்வத்தை மெச்சுகிறேன். திருக்குறளுக்கு ஜி.யு. போப் மட்டுமல்ல, பரிமேலழகர், மு. வரதராசனார், டாக்டர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் இன்னும் ஏராளமான தமிழறிஞர்கள் பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள். அவைகளையும் நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். இன்னும் அது சம்மந்தமாக மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கவிஞர் வைரமுத்து போன்றவர்களோடு கலந்து பேசி அறிந்து கொள்ளலாம். நீங்கள் வேறு மொழிக்காரர் என்ற காரணத்தினால் திருக்குறளை அறிந்து கொள்கிற உங்கள் முயற்சிக்கு தமிழக காங்கிரஸ் பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால், ஒரு சரியான பார்வையில் அதனை புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.

தலைவர் திரு கே.எஸ். அழகிரி