அறிக்கை 27 September 2022
கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் மூலம் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்துகிற முயற்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்திய மக்களின் எதிர்கால நலன் கருதி தமது நடைப்பயணத்தின் மூலம் தம்மைக் கடுமையாக வருத்திக் கொண்டு இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருப்பதை வழிநெடுகிலும் இருக்கிற மக்கள் அமோக ஆதரவளித்து வரவேற்று மகிழ்கிறார்கள். கட்சி எல்லைகளைக் கடந்து அவர் மீது அன்பைப் பொழிகிறார்கள். தம்மைச் சந்திக்க வருபவர்களுடன் உரையாடுகிறார். அவர்களது கருத்துகளைக் கேட்கிறார். ஜனநாயகத்தில் புதிய பரிமாணத்தை நடைப்பயணத்தின் மூலம் ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார். இந்த நடைப் பயணத்தின் மூலம் மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை நேரிடையாக தலைவர் ராகுல் காந்தி உணர்ந்து வருகிறார்.
தமிழகத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைப் பயணம் 59 கி.மீ., கன்னியாகுமரி மாவட்டத்திலும், 19 நாளில் 450 கி.மீ., கேரள மாநிலத்தை கடந்து வருகிற 29 ஆம் தேதி தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு தலைவர் ராகுல் காந்தி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வருகிற 29 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார். ஏறத்தாழ 6 கி.மீ. பயணத்தை மேற்கொண்டு கூடலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்து அங்கே மாலை 6.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூடலூர் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும் அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும் நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. இதன்மூலம் கூடலூர் பகுதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.
பா.ஜ.க. ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பணவீக்கத்தினால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைப்பொருளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், குறிப்பாக தேயிலைக்கு நியாய விலை மறுக்கப்பட்டு வருகிற சூழலில் இத்தகைய நடைப் பயணத்தை தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தலைவர் ராகுல் காந்தி அவர்களின் நடைப்பயணத்தின் மூலம் மக்களின் பிரச்சினைகள் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. அந்த பகுதி மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ராகுல் காந்தி குரல் கொடுக்கிறார். அவரது குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்காமல் இருக்கலாம். ஆனால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
ராகுல் காந்தி அவர்களின் நடைப் பயணத்தின் மூலம் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை அவர் பிரதிபலித்து வருவதை எவரும் தடுத்திட இயலாது. மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய நிறுவனங்கள் பா.ஜ.க.வின் கைப்பாவையாக ஆகிவிட்ட நிலையிலும் தலைவர் ராகுல் காந்தியின் குரலே மக்களின் குரல். மக்களின் குரலே இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். அந்த வகையில் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாளுக்கு நாள் மக்கள் பேராதரவுடன் பீடு நடை போடுகிற வகையில் நிகழ்ந்து வருகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இதன்மூலம் எதிர்காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள முயற்சியை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரவேற்று வருகின்றன. அரசியல் காற்று மாற்றத்தை நோக்கி வீசிக் கொண்டிருக்கின்றது. ஒளிமயமான எதிர்காலத்தை ராகுல் காந்தி தமது பயணத்தின் ஒவ்வொரு அடியின் மூலமும் வலிமைப்படுத்தி வருகிறார். அதற்காக நாட்டு மக்கள் அவரை பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.
எனவே, தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கூடலூர் நடைப்பயணம் வெற்றி பெற நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கூடலூர் நடைப்பயணத்தின் ஏற்பாடுகளை, தமிழ்நாடு இந்திய ஒற்றுமை பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. அவர்களும், ஊட்டி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. ஆர். கணேஷ் அவர்களும் மற்ற நண்பர்களுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள். தலைவர் ராகுல் காந்தியின் கூடலூர் நடைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மேலும் மகத்தான வெற்றியாக அமைய காங்கிரஸ் நண்பர்கள் பெருமளவில் திரண்டு வருவதை உறுதி செய்யும்படி அன்போடு அழைக்கிறேன்.
தலைவர் திரு கே.எஸ். அழகிரி