விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், பட்டாசு கடை விற்பனை நிலையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்போடு எடுக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 18-OCT-2023

விருதுநகர் மாவட்டம், சிவகாசி என்று சொன்னாலே பட்டாசு நினைவுக்கு வருகிற அதேநேரத்தில் அங்கே அடுத்தடுத்து நடைபெறுகிற விபத்துகளும், உயிரிழப்புகளும் நினைவுக்கு வருவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேரும், மற்றொரு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவரும் உயிரிழந்த சோக நிகழ்வு அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக இருக்கிறது. அங்கே வெடிவிபத்தின் போது ஏற்பட்ட சத்தம் 3 கி.மீ. தூரத்திற்கு எதிரொலித்திருக்கிறது. இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்கிற போது, நேற்று பிற்பகல் வெளியூரை சேர்ந்தவர்கள் வாங்கிய பேன்சி ரக பட்டாசுகளை கடையின் அருகே வைத்து வெடித்து பார்த்துள்ளனர். அப்போது வெடித்து சிதறிய பட்டாசுகள் எதிர்பாராத விதமாக கடைக்குள் விழுந்ததனால் இத்தகைய பயங்கர விபத்து ஏற்பட்டு அங்கே வேலை பார்த்த அப்பாவி தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி கருகிய கோரக் காட்சி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இத்தகைய கொடிய சம்பவங்களால் அப்பாவி ஏழை, எளிய மக்கள் தான் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய விபத்துகள் நடைபெறாமல் இருக்க பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும், பட்டாசு கடை விற்பனை நிலையங்களிலும் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்கிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மிகுந்த கண்காணிப்போடு எடுக்க வேண்டும். அதில் ஏதாவது பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் அவர்களது உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமே இத்தகைய விபத்துகளை தவிர்க்க முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறார். இதை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய நிதியுதவிகள் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டாலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்படுகிற பாதிப்பை முழுமையாக ஈடு செய்ய முடியாது. இத்தகைய தமிழக அரசின் உதவிகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரம் காக்கப்படும். அதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு கே எஸ் அழகிரி