கோவை குண்டு வெடிப்பின் மூலம் தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 25-Oct-2022

கோவை மாநகரில் முக்கிய பகுதியான டவுன் ஹால் அருகேயுள்ள கோட்டைமேட்டில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஒருவர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இக்கொடிய சம்பவம் தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. பயங்கரவாத சதி செயலாக இருக்குமோ என்ற அச்சத்தை தோற்றுவிக்கிறது. ஆனால் கோவை பயங்கர குண்டு வெடிப்பு மிகப்பெரிய பேரழிவை தவிர்த்திருக்கிறது. ஒரு கொடூரமான செயல் செய்வதற்கு சில இளைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து, அதை நடைமுறைப்படுத்த முனைந்தபோது அது தோல்வி அடைந்துள்ளது. அதன் பிறகு தமிழக காவல்துறை விரைந்து சென்று குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார்கள். இதற்காக தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன்.

இத்தகைய செயல்கள் மூலம் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். இது ஒரு மிருகத்தனமான செயல். மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்க வேண்டும் என்கின்ற ஒரு உணர்வு இந்த இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவர்கள் என்ன பயின்றார்கள்? என்ன அறிந்தார்கள்?  இந்த பிரபஞ்சத்தில் அவர்கள் கற்றுக்கொண்டது என்ன? இத்தகைய மிருகத்தனம் அவர்களிடமிருந்து எப்படி வந்தது என்று தெரியவில்லை.

கோவை குண்டு வெடிப்பின் மூலம் தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தமிழகத்தில் இத்தகைய தீவிரவாத செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை என்கிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

திரு கே.எஸ். அழகிரி