அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31 ஆம் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 28-Oct-2022

கோவையில் காரில் சிலிண்டர்  வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் ஐவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகளில் பாகுபாடு காட்டப்பட்டு விசாரணைகள் நியாயமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

என்.ஐ.ஏ. அமைப்புக்கு தமிழகத்தில் போலீஸ் நிலையம் கிடையாது. அவர்கள் தமிழகம் தொடர்பான வழக்குகளை கொச்சி அல்லது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. போலீஸ் நிலையங்களில் தான் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்.ஐ.ஏ. போலீஸ் நிலையம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. அதில் கோவை கார்  சிலிண்டர்  வெடிப்பு முதல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்.ஐ.ஏ. அமைப்புக்குத் தேவையான காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நியமிக்கவில்லை என்றால் விசாரணைக்குக் குந்தகம் ஏற்படுகிற நிலை ஏற்படும்.

இந்நிலையில், கோவை கார்  சிலிண்டர்  வெடிப்பு   குறித்து தமிழகக் காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். தமிழக அரசும் தேசிய புலனாய்வு முகமையிடம் இந்தவழக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31 ஆம் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

– திரு கே.எஸ். அழகிரி