“எதிர்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்கட்சித் தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சோதனைகள் மூலமாக எதிர்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவு காண்கிறது.”

அறிக்கை – 04-Nov-2023

நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது எதிர்கட்சிகளை வீழ்த்திவிட வேண்டுமென்று கடுமையான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்கட்சி ஆளுகிற மாநிலங்களிலும், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் எதிர்கட்சித் தலைவர்கள் மீதும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சோதனைகள் மூலமாக எதிர்கட்சிகளை முடக்கி விடலாம் என்று பா.ஜ.க. அரசு கனவு காண்கிறது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர்களான அன்னை சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம், டி.கே. சிவகுமார், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது இத்தகைய நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து ஆதாரமில்லாத நிலையில் செயலற்று கிடக்கின்றன. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என்கிற நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அதேபோல, முதலமைச்சர் அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்திலும் கமல்நாத்திற்கு நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை தொடர்புபடுத்தி அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. அவர் மீதே விசாரணையை நேரடியாக தொடங்கியிருக்கிறது. நவம்பர் மாத இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மீது இத்தகைய தாக்குதலை அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. செய்துள்ளது. இதனால் தேர்தல் வெற்றி வாய்ப்புகளின் திசையை மாற்றி விடலாம் என்று பா.ஜ.க. திட்டமிட்டு செயல்படுகிறது.

2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை நடத்திய மொத்த சோதனைகளில் 95 சதவிகிதம் எதிர்கட்சித் தலைவர்களை சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. இதை எதிர்த்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பழிவாங்கும் போக்கை தடுத்து நிறுத்த வழக்கு தொடுத்துள்ளன. அந்தளவிற்கு அமலாக்கத்துறை எதிர்கட்சிகளை பழிவாங்க சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து சிறையில் அடைப்பது, மனஉளைச்சலை ஏற்படுத்துவது, அரசியல் ரீதியாக அவர்களை செயல்பட விடாமல் முடக்குவதுதான் பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது. இதுவரை அமலாக்கத்துறை கடந்த 9 ஆண்டுகளில் பதிவு செய்த 1569 வழக்குகளில் 9 வழக்குகளில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய குறைவான தண்டனைகளுக்கு காரணம் எதிர்கட்சிகள் மீது ஆதாரமில்லாமல் பழிவாங்குவதற்காகவே வழக்குகள் போடப்பட்டதனால் தான் பெரும்பாலான வழக்குகள் நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளை சார்ந்தவர்கள் மீது இத்தகைய நிறுவனங்களைக் கொண்டு சோதனைகள் நடத்தி வழக்கு தொடுக்கப்பட்ட பிறகு அவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் புனிதர்களாகி விடுவதற்கு நிறைய சான்றுகளை கூற முடியும். இதற்கு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்த் பிஸ்வாஸ் சர்மாவும், மகாராஷ்டிராவை சேர்ந்த நாராயண ரானே, அஜித் பவார் போன்றவர்கள் சான்றுகளாக திகழ்கிறார்கள்.

இந்தியாவிலேயே பா.ஜ.க. ஆட்சியின் அலங்களையும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சித்தாந்தங்களையும் கடுமையாக எதிர்த்து, அரசியல் பேராண்மையுடன் குரல் கொடுத்து வருகிற முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். சித்தாந்த ரீதியாக பா.ஜ.க.வை எதிர்த்து கொள்கை போராட்டத்தை நடத்தி வருகிறார். இவரது ஆட்சியை முடக்குவதற்கு தமிழக ஆளுநரை பயன்படுத்துகிறார்கள். இவரது ஆட்சியிலே இருக்கிற அமைச்சர்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய தாக்குதல்களில் ஏற்கனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, 4 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜாமின் கிடைக்காது என்று மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக கூறுகிறார். இந்நிலையில் நேற்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இத்தகைய சோதனைகளின் நோக்கம் அவரை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என பா.ஜ.க. கருதுகிறது. ஏற்கனவே மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீட்டிலும், அலுவலகங்களிலும் இத்தகைய சோதனைகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்தெடுப்பதில் படுதோல்வி அடைந்த நிலையில் தமிழக ஆளுநர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை அமைப்புகளோடு கூட்டணி சேர்ந்து எதிர்கட்சிகளை ஒடுக்கி, பணிய வைத்து அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பகல் கனவு தமிழக மக்களின் பேராதரவோடு தகர்த்தெறியப்படும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த பல ஆண்டுகளாக கொள்கை உறுதியோடு, பொதுவான இலக்கோடு செயல்பட்டு 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெற்ற வெற்றியை விட 2024 மக்களவை தேர்தலில் நாற்பதும் நமதே என்ற நோக்கத்தோடு பீடுநடை போட்டு செயல்பட்டு வருகிறது.

எனவே, மக்கள் நலன்சார்ந்து தமிழக அரசு செயல்படுவதாலும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஒற்றுமையினாலும் மக்கள் பேராதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிற நிலையில் பா.ஜ.க.வின் பழிவாங்கும் போக்கு நிச்சயமாக முறியடிக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் திரு கே.எஸ். அழகிரி