அறிக்கை : 11 April 2023
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும், மக்கள் நலனுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடுமையான கண்டனங்களை கூறினாலும், தனது போக்கை ஆளுநர் மாற்றிக் கொள்வதாக இல்லை.
இந்தப் பின்னணியில் தான் சட்டப்பேரவையில் தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதைப்போல ஏற்கனவே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் ஆளுநருக்கு எதிராக இத்தகைய கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில்லை. இதற்கு காரணம் ஆளுநரின் எதேச்சதிகாரமான நடவடிக்கைகள் தான்.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி முடக்கி வைத்திருக்கிறார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மக்களின் குரலாக ஒலிப்பது சட்டமன்றம் தானே தவிர, ஆளுநரின் ராஜ்பவன் அல்ல. இவர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் தான். இவர் மக்களின் பிரதிநிதியாக ஒருகாலத்திலும் செயல்பட முடியாது. ஆனால், தமிழக அரசுக்கு இணையாக போட்டி அரசு நடத்துவதை போல கற்பனை செய்து கொண்டு ஆளுநர் மாளிகையில் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து பேசிய பேச்சுகள் ஆளுநரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. தமிழக அமைச்சரவையின் அறிவுரையின்படியும், ஆலோசனையின்படியும் தான் ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக செயல்பட முடியாது. சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம், அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம், அல்லது சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பலாம். ஆனால், இதுகுறித்து பேசும் போது, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது. எனவே, அது செத்துப் போன சட்டம் என்று புதிய வியாக்யானத்தை ஆணவத்தின் உச்சியிலிருந்து வழங்கியிருக்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள், சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இத்தகைய கருத்துகளை கூறுகிற ஆளுநர் ஒருநாள் கூட அந்த பொறுப்பில் அமர்வது ஜனநாயக விரோதச் செயலாகவே இருக்க முடியும். இதை இனியும் அனுமதிக்க முடியாது.
எனவே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார, சட்டவிரோதப் போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வருகிற 12.4.2023 புதன்கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில், மக்களவை தி.மு.க. தலைவர் திரு. டி.ஆர். பாலு தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துகிறார். மேலும், நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் இயக்க நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
கே.எஸ். அழகிரி