அறிக்கை | 11 August 2022
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்திய விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ், 1947 இல் விடுதலைப் பெற்று உலக அரங்கில் இந்தியாவை ஒரு வல்லரசாக வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டு பல்வேறு ஜனநாயக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 8 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு வருகின்றன. இந்திய ஜனநாயகம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை. அதை மூடிமறைக்க நாடு முழுவதும் மதரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வகுப்பு கலவரங்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடியிருக்கின்றன. அதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நம்பகத்தன்மைமிக்க ‘ஆக்ஸ்பார்ம்’ நிறுவனத்தின் அறிக்கையின்படி, நவம்பர் 2021 நிலவரப்படி 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102-ல் இருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூபாய் 23.14 லட்சம் கோடியிலிருந்து ரூபாய் 53.16 லட்சம் கோடியாக இருமடங்கு பெருகியிருக்கிறது. இத்தகைய சொத்துக் குவிப்புகளின் காரணமாகவும், தவறான பொருளாதார கொள்கையினாலும் 4.6 கோடி இந்தியர்கள் கடுமையான வறுமையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை உலகத்தில் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் பாதி என ஐ.நா.அறிக்கை கூறுகிறது. இதைவிட இந்தியாவுக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்பட்டமான சொத்துக் குவிப்பினால் சமநிலையற்றத் தன்மை இந்தியாவில் வளர்ந்து வருவதற்குக் காரணம் மோடி ஆட்சியில் ஒருசில முதலாளிகளுக்கான ஆதரவு போக்காகும்.
அதேநேரத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பரிசாக கம்பெனி வரி 30 சதவிகிதத்தில் இருந்து, தற்போது 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூபாய் 1.45 லட்சம் கோடி பலன் கிடைத்திருக்கிறது. பா.ஜ.க. அரசால் 2014 முதல் 2021 வரை வரிச் சலுகை, வரி ரத்து என ரூபாய் 6.15 லட்சம் கோடி அளவுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 10.72 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கிகள் நொடிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தக் கடன் ரத்தில் ரூபாய் 2.03 லட்சம் கோடி தள்ளுபடி, கொரோனா தொற்று தொடங்கிய முதல் ஆண்டு காலத்தில் செய்யப்பட்டது தான் மிகப்பெரிய கொடுமையாகும்.
பா.ஜ.க.வின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக ஏழை, எளிய மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஏப்ரல் 2022 நிலவரப்படி, அதற்கு முந்தைய ஆறு மாதத்தில் 88.1 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அதாவது, ரூபாய் 17.6 லட்சம் கோடி சொத்து குவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு நண்பரான முகேஷ் அம்பானியின் சொத்து 13.4 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அம்பானிக்கும், அதானிக்கும் நடைபெறுகிற வணிகப் போட்டியில் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவின் காரணமாக உலக பணக்காரர்களில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கௌதம் அதானி கைப்பற்றியிருக்கிறார். இந்த வளர்ச்சியின் அடிப்படையில் தான் பா.ஜ.க.வின் நிதி ஆதாரங்கள் அமைந்துள்ளன. இதை 8 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனை என்பதா ? மெகா ஊழல் என்பதா ?
எனவே, சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடுகிற அதேநேரத்தில், இந்தியாவிலுள்ள மக்களின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்கிற போது மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தான் ஏற்படுகிறது. இத்தகைய அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது. இந்த கடமையை உணர்ந்து பா.ஜ.க.விடமிருந்து இந்தியாவை மீட்டெடுக்க 75-வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் இதற்கான முயற்சிகளில் அனைத்து மக்களும் ஒருமித்த உணர்வுடன் ஈடுபட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
கே எஸ் அழகிரி