பாஜக இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 13 August 2022

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள தும்மகுண்டு ஊராட்சியைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய ராணுவ வீரர் திரு. லட்சுமணன் உள்ளிட்ட  நான்கு வீரர்கள் ஜம்மு காஷ்மீர் பகுதியில், தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் வீரமரணம் அடைந்துள்ளனர். இன்று காலை லட்சுமணனின் உடல் தனி விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று பகல் 12.15 மணிக்கு அவரது சொந்த கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. அவருக்கு அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வீரமரணம் அடைந்த திரு. லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, பா.ஜ.க.வினர் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அவர் வந்த கார் மீது காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. எதையும் அரசியல் ஆதாய நோக்கோடு செயல்படுகிற பா.ஜ.க.வினர், சகிப்புத்தன்மை இல்லாமல் இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

கே எஸ் அழகிரி