மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திர தின விழாவை கொண்டாடுவதாகக் கருதப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி 14 August 2022

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் 200 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து, 60 ஆண்டுகாலம் போராடி இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அண்ணல் காந்தியடிகள் தலைமையில், அகிம்சை வழியில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. கடந்த 75 ஆண்டுகளில் 17 பொதுத் தேர்தல்களை நடத்தி, அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில், 55 ஆண்டுகள் ஆட்சி செய்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற பணியில் காங்கிரஸ் கட்சி மகத்தான சாதனை படைத்துள்ளது.

ஆனால், 2014 இல் ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற வகையிலும், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும் பிரதமர் மோடி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த போக்கு ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். இதை எதிர்த்து ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. அனைவரது இல்லங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதைப் பார்ப்பதில் பரவசம் ஏற்படுகிறது. இதன்மூலம், நாட்டு மக்களின் தேசபக்தி மேலோங்கி வருவது மனநிறைவை தருகிறது.

தற்போது 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில் அரசமைப்பு சட்டத்தின்படி ஆட்சி நடைபெறவும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திர தின விழாவை கொண்டாடுவதாகக் கருதப்படும்.

இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால் தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 76-வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே எஸ் அழகிரி