சென்னை மாநகரில் 9 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் இணைந்து 21.7.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 20 July 2022

விடுதலைப் போராட்ட காலத்தில் 1938 இல் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் நிர்வாகத்தை சீரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘யங் இந்தியா நிறுவனம்’ குறித்து பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை, அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும், தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கும் பழிவாங்கும் நோக்குடன் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தலைவர் ராகுல்காந்தி கடந்த ஜூன் 13 முதல் 17 ஆம் தேதி வரை 5 முறை ஆஜராகி 40 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதேபோல, சமீபத்தில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வெடுத்து வருகிற அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களை வருகிற ஜூலை 21 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. இதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை முடக்கி விடலாம் என பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் எந்த பணப் பரிமாற்றமும் நடைபெறாத நிலையில், பண மோசடி வழக்கு என்பது பா.ஜ.க.வின் அற்பத்தனமான, மலிவான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.  இந்தியாவிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்து, சுதந்திர இந்தியாவில் 55 ஆண்டுகாலம் ஆட்சி செய்த வரலாற்றுப் பெருமைமிக்க இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து பெருமையும், சாதனையும் படைத்தவர் அன்னை சோனியா காந்தி. அவர் தலைமையில் தான் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சிக் காலத்தில் தான் இந்தியா வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு அளப்பரிய சாதனைகளை படைத்தது. அதற்கு அன்னை சோனியா காந்தியின் தலைமையும், ஒருங்கிணைப்பும் தான் காரணம்.

அன்னை சோனியா காந்திக்கு எதிரான அடக்குமுறை என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எதிராக தொடுக்கப்பட்ட அடக்குமுறையாகும். ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க.வின் பழிவாங்கும் போக்கை கண்டித்து, வருகிற 22.7.2022 வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் மாவட்டத்திலுள்ள முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

முதற்கட்டமாக, சென்னை மாநகரில் 9 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் இணைந்து 21.7.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆர்ப்பாட்டங்களின் மூலம், பா.ஜ.க.வின் அராஜக பழிவாங்கும் அரசியலை முறியடிக்க அனைவரும் அணிதிரண்டு பெருந்திரளாக வருகை தரும்படி அன்போடு அழைக்கிறேன்.

கே.எஸ். அழகிரி