இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். இது தேவையா ? ஏன் இந்தியாவிலேயே தயாரிக்க கூடாது ?

அறிக்கை 20-July-2023

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் இந்தியாவில் தயாரிப்பது (மேக் இன் இந்தியா) என்ற கோஷத்தை பரப்பினார். ஆனால், ஜவஹர்லால் நேரு காலத்திலேயே பொதுத்துறை நிறுவனங்கள் தான் மிகுந்த செல்வாக்கோடு இருந்தன. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் அடைந்த வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் மட்டும் தான் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், இரும்பு தொழிற்சாலைகள், ரயில் என்ஜின், ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், கப்பல் கட்டும் தளங்கள், ஏராளமான விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை எல்லாம் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார்.

‘இந்தியாவில் அமைக்கப்படுகிற புதிய தொழிற்சாலைகள் தான் நவீன ஆலயங்கள்’ என்று நேரு சொன்னார்.

அவர் காலத்தில் தான் இந்தியாவில் கனரக இயந்திரங்களின் உற்பத்தி அதிகமாயிருந்தது. ஆனால், அவைகளை மறைக்கிற மாதிரி எல்லாவற்றையும் நான் இந்தியாவில் உருவாக்கப் போகிறேன் என்று மோடி சொன்னார். ஆனால், அவருடைய சொல்லுக்கும், செயலுக்கும் சம்மந்தமில்லை.

உலகில் இந்திய ரயில்வே இரண்டாவது மிகப்பெரிய ரயில்வே ஆகும். நாமே ரயில்களை உருவாக்கினோம், ரயில் என்ஜின்களை உருவாக்கினோம். அதனால் நம்முடைய அந்நிய செலாவணி மிச்சமாகியது. ஆனால், இன்றைக்கு ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட இருக்கிறது. ஒரு ரயிலின் விலை 120 கோடி ரூபாய். இது தேவையா ? ஏன் இந்தியாவிலேயே தயாரிக்க கூடாது ? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அப்படி இருக்கிற போது நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார்.

உள்நாட்டில் முடிந்த அளவுக்கு உற்பத்தி செய்தால் தான் ஒரு வல்லரசாக முடியும். தேவையான உதிரி பாகங்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அல்லது தொழில்நுட்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கு உதவும். மோடி செய்வது அடிமை இந்தியாவைத் தான் உருவாக்கும்.

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யாவில் இந்தியாவினுடைய ஏராளமான திட்டங்களை கொடுத்து அதன்மூலமாக பொருட்களை வாங்குகிறார். இது வளர்ச்சியடையாத நாடுகள் செய்யக் கூடிய விஷயம். இவர் நிறைய வியாபாரம் கொடுக்கிற காரணத்தினால் அந்த நாடுகள் இவரை அழைத்து பாராட்டுகின்றன. அந்த நாடுகளில் இவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று பா.ஜ.க.காரர்கள் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இது சுயவிளம்பரத்திற்கு உதவுமேயொழிய இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவாது. சுயசார்பு என்ற நிலையை நாம் அடைய முடியாது. எனவே, மோடியின் இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தலைவர் திரு கே எஸ் அழகிரி