அதானி போன்றோரை வளர்த்துவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி என்ற பெயரில் பெரும் தொகையைப் பெறுகின்றனர். அதாவது ஊழலை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கிவிட்டதையே இது காட்டுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 22 June 2022

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்துறையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ.பெர்டினன்டோ வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு நிர்பந்தங்களுக்குப் பின் தம் கருத்தை அவர் திரும்பப் பெற்றாலும், தான் பரிசுத்தமானவர் என மோடி தனக்குத் தானே கட்டமைக்கும் தோற்றத்தை இந்த குற்றச்சாட்டு தகர்த்திருக்கிறது.

இந்திய தொழிலதிபரான கவுதம் அதானியின் அசுர வளர்ச்சி கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி அவர் உலக பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இந்தியாவில் ஆறு பொது வர்த்தக நிறுவனங்களுடன் ஒரு துறைமுகம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி, கவுதம் அதானி மட்டுமே தொடர்ந்து அசுர வளர்ச்சி அடைந்து வருவதாக ஃபோர்ப்ஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 8.9 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, 2021 ஆம் ஆண்டு மார்ச்சில் 50.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. மார்ச் 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்து 90 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததையும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.  அதானி குழுமத்தின் அதானி பவர் லிமிடெட்ட நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு உடுப்பி பவர் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை வெறும் 100 மணி நேரத்திற்குள்ளாக பேரம் பேசி வாங்கியது வியப்பை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 49 பில்லியன் டாலராகக் கூடியுள்ளது. கடந்த ஓராண்டில் வாரம் ரூபாய் 6 ஆயிரம் கோடி வருமானத்தை அதானி ஈட்டியுள்ளார். இதன்மூலம் அவரது சொத்து மதிப்பு இருமடங்காகி 153 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மோடி ஆட்சி அமைந்த எட்டு ஆண்டுகளைக் கணக்கிட்டால் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. பிரதமர் மோடியின் தயவாலும், ஆதரவாலும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 313-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 12-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். பிரதமர் மோடியினுடைய ஆட்சி யாருக்காக நடைபெற்று வருகிறது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒருபக்கம் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். ஆனால், மறுபக்கம் பிரதமர் மோடி ஆட்சியில் அதானி, அம்பானிகள் போன்ற குறிப்பிட்ட சில முதலாளிகளின் சொத்து மதிப்பு பலமடங்கு கூடியுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் கவுதம் அதானியின் தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. தொலைத்தொடர்பு, வணிக வளாகங்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபம் ஈட்டுகிறது. துறைமுகம், ரயில்வே துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபம் ஈட்டுகிறது அதானி குழுமம்.

தொழிலதிபர்களை வைத்து பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நவீன விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் அதானியின் 8 ஆண்டுகால அசுர வளர்ச்சி காட்டுகிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் அதானியின் பின்னே நிற்கின்றன. அமலாக்கத்துறை அதானியை அரவணைக்கிறது. அரசின் மற்ற உயர் அரசு நிறுவனங்களுக்கும் அதானி செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறார்.

அதானி போன்றோரை வளர்த்துவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி என்ற பெயரில் பெரும் தொகையை பெறுகின்றனர். அதாவது ஊழலை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கிவிட்டதையே இது காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் கவுதம் அதானி காலூன்ற உதவி செய்ததன் மூலம், ஊழலை கடல் கடந்தும் விரிபடுத்தியிருக்கிறது மோடி அரசு. கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கோடிக் கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தைச் சேர்ந்த அதானியும் அம்பானியும் தங்கள் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பா.ஜ.க. தரப்பில் அடைந்த ஆதாயத்தை இமாலய ஊழல் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

கே.எஸ். அழகிரி