இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 22 September 2022

இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பா.ஜ.க. தொடுத்து வருகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.  இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.

பா.ஜ.க. ஆட்சியின் வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றால், ஏழை எளிய மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் நிலையற்றத்தன்மையில் உள்ளது. சர்வதேச ஆக்ஸ்பார்ம் நிறுவன அறிக்கையின்படி, 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சில பணக்காரர்களின் சொத்துகள் 2021இல் அபார வளர்ச்சியடைந்துள்ளது. 10 சதவிகித குடும்பங்கள் 57 சதவிகித சொத்துகளை வைத்துள்ளன. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102லிருந்து 142 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு ஒரே ஆண்டில் ரூபாய் 23.14 லட்சம் கோடியிலிருந்து ரூபாய் 53.16 லட்சம் கோடியாக அபார வளர்ச்சியடைந்துள்ளது. இதில் அதிகமாகப் பயனடைந்தவர்கள் அதானியும் அம்பானியும்தான்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 28வது இடத்தில் இருந்த கௌதம் அதானி இரண்டாவது இடத்திற்கு பத்தாண்டில் வந்திருக்கிறார். கடந்த ஆண்டில் மட்டும் 116 சதவிகித வளர்ச்சி அடைந்திருக்கிறார். கடந்த ஆண்டில் நாள்தோறும் ரூபாய் 1600 கோடி வருமானம் பெற்றிருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூபாய் 11 லட்சம் கோடி உயர்ந்ததற்கு யார் காரணம் ? இந்த சொத்து குவிப்பிற்கு பின்னால் இருப்பவர் யார் ? அவரை அடையாளம் காண்பது மிக மிக எளிதாகும். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கௌதம் அதானியின் நெருங்கிய நண்பர்தான் இன்றைய பிரதமர் மோடி என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இதன் மூலம் மோடியின் ஆட்சி யாருக்காக நடக்கிறது ? எதற்காக நடக்கிறது என்பதை விளக்கிக் கூறத் தேவையில்லை. எனவே, ஒரு சில குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு செயல்படுவதும், அவர்கள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வழியாக நிதிகளைக் குவிப்பதும் பா.ஜ.க.வுக்குக் கைவந்த கலை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையினர், பின்தங்கிய சமுதாயத்தினர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகி பலரது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கொடுமைக்கு இரண்டு ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. தேசிய குற்ற ஆவன காப்பகத்தின்படி, 45,852 தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் 25 சதவிகிதம் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் நடந்துள்ளது. டிசம்பர் 31, 2019 நிலவரப்படி, சிறையில் இருக்கிற 65 சதவிகிதத்தினர் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமுதாயத்தினர் என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிற செய்தியாகும். இவர்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு கடுமையான துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

பா.ஜ.க. ஆட்சியில் பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட 5422 பேரில் 23 பேர்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும், உபா சட்டத்தின் மூலம் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் பழிவாங்கும் நோக்கமே தவிர, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிப்பது அல்ல.

எனவே, சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் கடுமையான அடக்குமுறையை மோடி அரசு எதிர்க்கட்சிகள் மீது ஏவிவிட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழிவாங்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு இந்திய அரசமைப்புச் சட்டம்தான். இதன் மூலமே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் காப்பாற்றப்படும். இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., துறை, எஸ்.டி. துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன், சிறுபான்மைத்துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்புசாராத் தொழிலாளர் பிரிவு என எட்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க இந்த நடைப்பயணத்தை வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடக்கி வைக்க இருக்கிறேன். இந்நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் திரு. ப. சிதம்பரம், எம்.பி., திரு. திக்விஜய் சிங், திரு. சல்மான் குர்ஷித், திரு. ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநிலக் காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே பரப்புரை செய்து 3500 கி.மீ., 150 நாள்கள் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், இந்த நடைப்பயணத்தின் மூலம் மக்களின் ஆதரவினைத் திரட்டுவதற்காகவும் இந்த தீவிர முயற்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த எழுச்சிமிக்க  நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று வெற்றிபெற அனைவரது ஆதரவையும் கோருகிறேன்.

கே.எஸ். அழகிரி