பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து வெற்றி கண்ட நேஷனல் ஹெரால்டு, இன்றைய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கையும் நிச்சயம் முறியடித்துக் காட்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

22-Nov-2023

அறிக்கை

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களின் குரலாக பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இன்றைய ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து வெற்றி கண்ட நேஷனல் ஹெரால்டு, இன்றைய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கையும் நிச்சயம் முறியடித்துக் காட்டும்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து 2004 இல் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அத்தகைய ஆட்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை ஏதாவது ஒரு வகையில் ஊழல் வழக்கில் சிக்க வைக்க மோடி அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் 2014 இல் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரை பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் நேஷனல் ஹெரால்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூபாய் 750 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய அசோசியேட் ஜர்னல் லிமிடெட் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அடையப்போகும் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் பா.ஜ.க.வின் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சில முன்னறிவிப்பு அல்லது முக்கிய குற்றத்தின் விளைவாக மட்டுமே பண மோசடி தடுப்பு நடவடிக்கை இருக்கும். அசையா சொத்தை மாற்றவில்லை. இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனை இல்லை. குற்ற நடவடிக்கை இல்லை. உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை. தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது.

சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற எந்தவொரு கூட்டணியினராலும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. அடையப்போகும் தோல்வியைத் தடுக்க முடியாது. அசையா சொத்துகளை அடமானம் வைத்தே கடன் பெறப்பட்ட நிலையிலும், பணப் பரிமாற்றத்தில் விதிமீறல் இல்லாத நிலையிலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளக் குரலாக, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாக திகழும் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அற்பத்தனமான பழிவாங்கும் உத்தியை வைத்து எந்த வகையிலும் இந்திய தேசிய காங்கிரசை அச்சுறுத்த முடியாது. இதை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்.

தலைவர் திரு கே எஸ் அழகிரி