மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 23 May 2022

ஒன்றிய பா.ஜ.க. அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது கூட பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரி விதித்து கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி ரூபாய் வருவாயை பெருக்கிக் கொண்டது. இதனால், சமீபகாலமாக பணவீக்கம் 95 மாத உயர்வாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. உணவு பணவீக்கம் 8.38 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால், அனைத்து பொருட்களின் விலையும் ஏறுவதை எதிர்கொள்ள முடியாமல் பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு பெயரளவில் குறைத்திருக்கிறது. ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்யும் போது இந்த விலை குறைப்பினால் சில்லரை பணவீக்க அளவில் 0.15 சதவிகித புள்ளிகள் அளவில் தான் பயன் தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து கண் துடைப்பு நாடகத்தை நடத்தியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு 12 தவனைகளில் கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 26.77 மற்றும் டீசலுக்கு ரூபாய் 31.47 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால், இதுவரை கலால் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 14.50 மற்றும் டீசலுக்கு ரூபாய் 21 மட்டுமே குறைத்துள்ளது. கலால் வரி உயர்த்தியது ரூபாய் 26.77. ஆனால் குறைத்தது ரூ.14.50 மட்டுமே.

கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா தொற்றினால் கடுமையான பாதிப்பு, வேலை இழப்பு, வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி மூலம் ரூபாய் 8 லட்சம் கோடி வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த 2020-21 இல் மட்டும் ரூபாய் 3 லட்சத்து 71 ஆயிரத்து 908 கோடியை கலால் வரி மூலம் ஒன்றிய அரசு வருவாய் பெற்றுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகள் வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் கூறியிருப்பது பொறுப்பை தட்டி கழிக்கிற செயலாகும்.

கடந்த 2014 மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 9.48 ஆகத் தான் இருந்தது. ஆனால், 2022 மே 21 இல் அது ரூபாய் 27.90 ஆக உயர்ந்துள்ளது. தற்போது குறைத்திருப்பதன் மூலம் ரூபாய் 19.90 ஆக கலால் வரி உள்ளது. இதைப்போலவே டீசலுக்கு அப்போது ரூபாய் 3.56 மட்டுமே இருந்தது. தற்போது அது ரூபாய் 21.80 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தற்போதைய வரி குறைப்பால் ரூபாய் 15.80 தான் குறைந்திருக்கிறது. இதன்மூலம் மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருப்பதாக அறிவித்திருப்பதனால் பெரிய அளவில் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றுச் சொன்னால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக குறைப்பதன் மூலமே அது சாத்தியமாகும். இதை நிதியமைச்சர் புரிந்து கொள்ளாமல் மாநில அரசுகள் மீது பழி போடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் மே 2014 இல் ரூபாய் 400 ஆக இருந்தது, இன்று ரூபாய் ஆயிரத்திற்கு மேல்சென்று விட்ட நிலையில் தற்போது ரூபாய் 200 மானியமாக வழங்கப்படுவதால் ரூபாய் 803 ஆக விற்கப்படுகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசால் 84 சதவிகித குடும்பங்களின் வருமானம் குறைந்து கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை வரலாறு காணாத விலை உயர்வுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறாக கொள்கை தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய விரோத நடவடிக்கைகளுக்கு மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள்.

– கே எஸ் அழகிரி