23-Sep-2024
அறிக்கை
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் ஆர்.என். ரவி அரசமைப்புச் சட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அவர் பேசும் போது, மதச்சார்பின்மை என்ற வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம் பெறவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு, மதச்சார்பின்மை என்ற வார்த்தை சொருகப்பட்டது என்று கூறி, அதுகுறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். எந்த அரசமைப்புச் சட்டத்தின் மீது பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ, அதை அவமதிக்கிற வகையில் ஆளுநர் பேசியிருப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
சமய சார்பின்மையின் என்பதன் பொருளானது, அரசு எந்த மதத்தையும் தனக்கென ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகும். நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் அரசமைப்புச் சட்டம் சமமாக பாவிக்கிறது. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு சமயத்தை ஏற்றுக் கொள்ள, அதை பரப்ப உரிமை கொண்டுள்ளார்கள். இதனை அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 25 முதல் 28 வரையுள்ள வாசகங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளும் இந்திய அரசமைப்பில் சமய சார்பற்ற நிலையை நமக்கு உணர்த்துகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியா ஒரு சமய சார்பற்ற குடியரசு என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு சமயம் என்றோ, அரசு ஆதரவு பெற்ற சமயம் என்றோ இந்தியாவில் எதுவும் இல்லை. இதற்கு கேடு விளைவிக்கிற வகையில் ஒரு மாநிலத்தின் ஆளுநரே மதச்சார்பற்ற கொள்கையை விமர்சனம் செய்து மதவெறுப்பை வளர்க்கிற வகையில் பேசியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.
அரசமைப்பு சட்டத்தில் 25 முதல் 28 வரை உள்ள பிரிவுகளை வாசித்தால் இந்தியா ஓரு இறையாண்மை கொண்ட சமதர்ம, சமய சார்பற்ற, மக்களாட்சி குடியரசு என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையே இது உறுதி செய்யப்பட்டு மேலும் வலிமைப் பெறுகிறது. 1976 ஆம் ஆண்டு 42-வது திருத்தத்தால் சமய சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டாலும், ஏற்கனவே அரசமைப்புச் சட்ட பிரிவுகள் அதை உறுதி செய்கிற வகையில் அமைந்திருப்பதை, ஆளுநர் ஆர்.என். ரவி திட்டமிட்டு மூடி மறைத்து பேசுவது அப்பட்டமான அரசியல் மோசடியாகவே பார்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டப்படி பொறுப்பு வகிக்கிற ஒரு ஆளுநர் இப்படி பேசுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
1925 இல், நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற முயற்சியின் விளைவு தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையாகும். அதையொட்டி நடந்த கலவரங்களுக்கும், அதை தடுத்து நிறுத்த முயன்ற காந்தியடிகளை நாதுராம் கோட்சே படுகொலை செய்த கொடிய பாவங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நச்சுக் கருத்துகளை சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழ்கிற கன்னியாகுமரியில் ஆளுநர் பேசியிருப்பதை மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, கலவரத்தை தூண்டுகிற முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது.
1984 மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களையும், 7.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சி, 1996 இல் 161 இடங்களைப் பெற்றதன் அரசியல் பின்னணி என்ன என்பதை அனைவரும் அறிவார்கள். 450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்து விட்டு, அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று ரத யாத்திரை நடத்தி, கலவரத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானவர்களை பலியாக்கி, அதன்மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி ஆட்சிக்கு வந்த கரைபடிந்த அத்தியாயம் தான் பா.ஜ.க. என்பதை எவராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதை முறியடிப்பதற்காகத் தான், தலைவர் ராகுல்காந்தி இருமுறை பத்தாயிரம் கிலோ மீட்டர் நடந்து இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்துகிற முயற்சியில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறார்.
கடந்த காலங்களில் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த நன் சிஸ்டர்களை மானபங்கப்படுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்து அனைத்து மத பிரிவினருக்கும் சமூக சேவை செய்த ஸ்டேன்ஸ் பாதிரியாரையும், குழந்தைகளையும் சேர்த்து குடும்பத்தோடு எரித்து சாம்பலாக்கினார்கள். குரான், பைபிள் எல்லாம் எரித்து மதஉணர்வாளர்களை புண்படுத்தினார்கள். கிறிஸ்துவ தேவாலயங்களையெல்லாம் தீவைத்து சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தினார்கள். ஓவியர் உசேனின் கலைக்கூடத்தை அடித்து நொறுக்கி நிர்மூலமாக்கினார்கள். பாகிஸ்தான் பாப் பாடகர் இந்தியாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என கலவரம் நடத்தி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என்று மைதான ஆடுகளத்தை சேதப்படுத்தினார்கள். கடவுள் ஒருவரே, அவரை பல்வேறு வடிவத்தில் பல்வேறு விதமாக வழிபடுகிறோம் என்பது நம் கொள்கை என்று கூறுகிற ஆர்.என். ரவி இத்தகைய மதவெறி நடவடிக்கைகளை அவருடைய சனாதன தர்மம் அனுமதிக்கிறதா ? ஏற்றுக் கொள்கிறதா ? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.
எனவே, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பேச்சு, அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும். இத்தகைய பேச்சுகளை அவர் தொடர்ந்து பேசுவாரேயானால் அவருக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புகளை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அணி திரண்டு வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ