மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி – 24-Dec-2022

அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்து சமூக சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டவர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தினர். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் என பல அளப்பரிய பணிகளின் மூலம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு, பாதுகாவலாக கிறிஸ்துவ மதம் விளங்குகிறது. ஆனால், இன்றைய பா.ஜ.க. ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காகவே மதமாற்றத் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருக்கிறது. இதன்மூலம், கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அச்சுறுத்தப்படுகிற சூழல் உருவாகியிருக்கிறது.

கிறிஸ்துவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். ஆனால், அதற்கு மாறாக மக்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்று அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், 1951 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்துவ சமுதாயத்தினர் 2.5 சதவிகிதம் இருந்ததை விட 2022 இல் மக்கள் தொகை பெருகவில்லை என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் பணியாற்றுகிற கிறிஸ்துவ சமுதாயத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

எனவே, மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

– தலைவர் திரு கே.எஸ். அழகிரி