பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் நாளை (26.03.2023) ஞாயிறுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டம்.

அறிக்கை 25-03-2023

இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவை பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக்குரலாக ஒலித்த தலைவர் ராகுல் காந்தி அவர்களது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இருக்கிற உறவு குறித்து குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்.

பிரதமர் மோடி தமது நண்பர் கவுதம் அதானிக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைவதற்கு பல்வேறு உதவிகளை செய்ததை மக்களவையில் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் பேசியதை பா.ஜ.க.வினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரது உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிற ஜனநாயக விரோத செயலை செய்திருக்கிறார்கள்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே அவசர அவசரமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல, கட்சி எல்லைகளை கடந்து கோடிக்கணக்கான மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

தலைவர் ராகுல் காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க.வின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக தலைவர் ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்துகிற வகையில் நாளை (26.03.2023) ஞாயிறுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மகாத்மா காந்தி சிலை முன்பு ஒரு நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தை மாவட்ட தலைநகரங்களில் நடத்தும் படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அறப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களின் ஆதரவை பெருமளவில் திரட்ட வேண்டும் என  கேட்டுக்கொள்கிறேன்.

– கே எஸ் அழகிரி