சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலைவர் திரு கே எஸ் அழகிரி

23 OCT 21 அறிக்கை 

பச்சைத் தேயிலைக்கு குறைவான சந்தை விலை, தினக்கூலி அதிகரிப்பு, உரம் விலை உயர்வு, தேயிலை பறிக்கும் செலவு மற்றும்  பராமரிப்புச் செலவு அதிகரித்திருப்பால், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

30 ஆயிரம் சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பச்சைத் தேயிலையை, தமிழக அரசின் இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 17 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்கின்றன. மீதமுள்ள 35 ஆயிரம் சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 150 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்கின்றன.

விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச நியாய விலையை, ‘உற்பத்திச் செலவு மற்றும் பாதி உற்பத்திச் செலவு சேர்த்து வழங்க வேண்டும்’ என மத்திய அரசு அமைத்த டாக்டர் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கான குறைந்தபட்ச விலை ரூ.25 மற்றும் ரூ.12.50 சேர்த்து மொத்தம் ரூ.37.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

நிர்வாகம் மற்றும் வாழ்வாதாரத்தை எதிர்கொள்ளும் வகையில் ரூ. 100 கோடி அளவுக்கு ‘கார்பஸ் நிதி’ என்ற வைப்பு நிதியைச் செயல்படுத்துவது குறித்து, சிறு தேயிலை உற்பத்தியாளர்களுடன் மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி, ஒரு கிலோ பச்சைத் தேயிலையின் குறைந்தபட்ச நியாய விலை ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், தேயிலை தொழிற்சாலைகளின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.125 என நிர்ணயிக்கப்பட்டது.   நிர்ணயிக்கப்பட்ட விலையை விட சந்தை விலை குறைந்தால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ‘கார்பஸ்’ நிதியிலிருந்து சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 வழங்கப்படும்.

சந்தை விலை ரூ.125-ஐ விட அதிகமானால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்குச் சிறு உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 கிடைக்காது. அந்த கூடுதல் தொகை ‘கார்பஸ்’  நிதிக்குத் திரும்பிச் சென்றுவிடும்.

17 இண்ட்கோ தேயிலை தொழிற்சாலையை நவீனப்படுத்த, நபார்டு வங்கியிடமிருந்து ரூ.70 கோடி  கடனாக இண்ட்கோசர்வ் பெற்றுள்ளது.  இந்த கடனை ‘கார்பஸ்’ நிதிக்குத் திருப்பி விட வேண்டும். அப்போது தான் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் குறைந்தபட்ச  நியாய விலையை முன்கூட்டியே பெற முடியும்.

அதோடு, தனியார் மற்றும் 17 இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளுக்கான தேயிலை ஏலம் விடுவது வெளிப்படையாக நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறு உற்பத்தியாளர்கள் முன் வைக்கின்றனர்.  இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவது, பச்சைத் தேயிலைக்குக் குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க உதவாது என்பதே தேயிலை உற்பத்தியாளர்களின் அச்சமாக இருக்கிறது.

எனவே, சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்பட்ட பின்னரும், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை இண்ட்கோசர்வ் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி