30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

26-April-2024

அறிக்கை

30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது சேவைகளை நினைவு கூற விரும்புகிறேன். திருச்சி மாவட்டம், விரகலூரில் பிறந்த இவர், பிற்காலங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்கிற பழங்குடியின மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியவர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பீமாகொரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தொடக்கத்தில் பூனா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குகளை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தது. சிறைச்சாலையில் நீண்டகாலமாக இருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஜாமினில் வெளிவருவதற்கு நீதிமன்றத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவருக்கு ஜாமின் வழங்குவதை மோடி அரசு தேசிய புலனாய்வு முகமை மூலமாக ஆட்சேபனைகளை எழுப்பி தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2021 ஜூலை 5 அன்று தமது 83-வது வயதில் நீதிமன்ற ஆணையின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிறிஸ்துவ சமுதாயத்தில் பிறந்து பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்த சேவை மனப்பான்மை கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான திரு. ஸ்டேன் சுவாமி அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவது மிகவும் பொருத்தமானது. இவரைப் போன்றவர்களின் வாழ்க்கை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்றைய மோடி ஆட்சியில் பயங்கரவாத தடுப்புச் சட்டம், பணபரிமாற்ற தடைச் சட்டம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி கொடுமைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளான எண்ணற்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களில் திரு. ஸ்டேன் சுவாமி முதன்மையானவராக கருதப்படுகிறார். அத்தகைய போராளியை அவரது பிறந்தநாளில் நினைவு கூறுவது நமது கடமையாகும்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ