அறிக்கை 27-Feb-2023
“தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்வதே எனது இலக்கு” என்று கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் தி.மு.கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாள் விழா மார்ச் மாதம் ஒன்றாம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. ஏற்பாட்டில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ள பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்
திரு மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் வாழ்த்துரை வழங்க அழைக்கப் பட்டிருக்கிறார். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றதற்கு பிறகு, முதல் முறையாக சென்னை மாநகருக்கு வருகை தருவது மிகுந்த பெருமைக்குரியதாகும். திரு மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் மார்ச் 1 ஆம் தேதி பகல் 12 மணியளவில் சென்னை, விமான நிலையத்திற்கு வருகை தருகிறபோது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு வழங்கவேண்டும் என சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்விழா தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் மாபெரும் விழாவாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
திரு ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் மூலம் நாட்டுமக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்து, எழுச்சி மிக்க மக்கள் தலைவராக உருவெடுத்த நிலையில் தான் ராய்பூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கான தீர்மானங்களும், செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் சென்னை மாநகருக்கு வருகை தருகிற திரு மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அளிக்கிற வரவேற்பு மிகப்பெரிய அளவில் அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தலைவர் திரு கே.எஸ். அழகிரி