இந்தியாவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் பண்டித நேருவைப் பற்றி இழிவுபடுத்துகிற வகையில் கருத்து கூறியிருக்கிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு பண்டித நேரு அவர்களே எழுதிய ‘தி டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற ஆங்கில நூலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புகிறேன்.

அறிக்கை 27-May-2023

தமிழக ஆளுநராக திரு. ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டது முதற்கொண்டு ஏதாவது ஒரு வகையில் விமர்சனங்களை கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இத்தகைய போக்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைகளை மீறுகிற வகையில் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறப்பது குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திறப்பு விழா நாளாக சாவர்க்கர் பிறந்தநாளை முடிவு செய்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தண்டனை பெற்று அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் தன்னை விடுக்கக் கோரி பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு 1911, 1913, 1914, 1918, 1920 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மன்னிப்பு கடிதங்களை எழுதியதை எவரும் மறுக்க முடியாது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய துரோகப் பின்னணி கொண்ட இவரது பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது இந்திய மக்களை இழிவுபடுத்துவதாகும்.

பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குடியரசுத் தலைவர் தான் பாராளுமன்றத்தை கூட்டுவது, முடித்து வைப்பது, கலைப்பது, மசோதாவுக்கு ஒப்புதல் தருவது அல்லது நிராகரிப்பது ஆகிய சட்டத் தொடர்பான அதிகாரங்களைக் கொண்டவர். குடியரசுத் தலைவர் நாட்டின் சின்னமாகவும், அரசமைப்பின் தலைமை நிர்வாக பொறுப்பு கொண்டவராகவும் விளங்குகிறார். தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது குடியரசுத் தலைவரை அவமதிக்கிற செயலாகும். இதன்மூலம், பழங்குடியின மக்களையும், அரசமைப்புச் சட்டத்தையும் உதாசீனப்படுத்தியிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெற்ற போது, 1947 ஆகஸ்ட் 15 அன்று ஆட்சி மாற்றத்திற்கு தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டதாக திட்டமிட்டு ஆதாரமற்ற செய்தி பரப்பப்பட்டு வருகிறது. பிரதமர் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமாக செங்கோல் வழங்கப்பட்டதாகக் கூறுவது முற்றிலும் தவறான செய்தியாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதேநேரத்தில், இத்தகைய நிகழ்வு நடைபெறவில்லை என செங்கோல் வழங்குவதில் சம்மந்தப்படுத்தப்பட்;டுள்ள மூதறிஞர் ராஜாஜியினுடைய பேரன் திரு. ராஜ்மோகன் காந்தி முற்றிலும் மறுத்திருக்கிறார். மகாத்மா காந்தி, ராஜாஜி, சர்தார் பட்டேல் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய திரு. ராஜ்மோகன் காந்தி, இப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என முற்றிலும் மறுத்த பிறகு, இதுகுறித்து மேலும் விளக்கம் கூற வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட முறையில் பிரதமர் நேருவிடம் வேறொரு நாளில், வேறொரு இடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை வழங்கியிருக்கலாம். அதை ஆகஸ்ட் 15, 1947 ஆட்சி மாற்றத்தோடு முடிச்சு போடுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

மேலும், இதுகுறித்து கருத்து கூறிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேவையில்லாமல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இந்திய மக்களின் பாரம்பரிய பண்பாடு குறித்து சரியான புரிதல் இல்லை என்று கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இந்திய மக்களை நன்கு புரிந்து அவர்களது வாழ்க்கை முறையை சுற்றுப் பயணத்தின் மூலம் நேரில் அறிந்து பண்பாட்டுக் கலாச்சார ரீதியாக ஆராய்ச்சி செய்து, பண்டித நேரு எழுதிய வரலாற்றுப் புத்தகம் தான் ‘தி டிஸ்கவரி ஆப் இந்தியா’. இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் அகமத் நகர் கோட்டை சிறைச்சாலையில் இருந்த போது 1944 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும். இதில் சிந்துசமவெளி நாகரிகம், ஆகமங்களும், புராணங்கள், வேதங்கள், இந்திய கலாச்சாரம், இந்து மதம், புத்த மதம் ஆகியவற்றின் வளர்ச்சி உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்றை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறார். இந்நூலை படிப்பவர்களுக்கு இந்தியாவை கண்டுணர்ந்து சரியான புரிதலோடு வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ்கிற இந்திய மக்களை நேர்கொண்ட பார்வையில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எனவே, இந்தியாவைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் பண்டித நேருவைப் பற்றி இழிவுபடுத்துகிற வகையில் கருத்து கூறியிருக்கிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு பண்டித நேரு அவர்களே எழுதிய ‘தி டிஸ்கவரி ஆப் இந்தியா’ என்ற ஆங்கில நூலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புகிறேன். இந்நூலை ஆளுநர் ஆர்.என். ரவி பெற்றுக் கொண்டு, படித்து, இந்தியாவை கண்டுணர்ந்து தெளிவு பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 

– தலைவர் திரு கே.எஸ். அழகிரி