ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

27-May-2025 | 

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, பண்டித ஜவஹர்லால் நேரு, புதிய தேசம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை தம் தோளில் ஏற்றார். இந்தியா எப்படி இருக்க வேண்டும், அதன் அடையாளம் என்னவாக இருக்க வேண்டுமென்ற தெளிவை கொண்டவர். அவருடைய பார்வையில் இந்தியா என்பது ஒரு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையுடனும், அறிவியல் மனப்பான்மையுடனும், சமத்துவத்தையும் சமூக நியாயத்தையும் நிலைநாட்டும் நாடாக இருக்க வேண்டும், கல்வி நாட்டை மாற்றும் மிக முக்கிய கருவியாக ஒரு நாட்டின் எதிர்காலத்தை கட்டமைக்கக்கூடிய சக்தியாக அவர் நம்பினார்.

இந்த உயரிய நோக்கத்துடன் அவர் தன்னுடைய தலைமையில் பல முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கினார். இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் டெக்னாலஜி (IIT) உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் நிறுவனங்களாக உருவாக்கப்பட்டன. மேலாண்மைத் துறையில் கற்றல் மற்றும் பயிற்சி அளிக்க இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மேனேஜ்மெண்ட் (IIM) உருவாக்கப்பட்டன. மருத்துவத் துறையில் உயர்தர கல்வி மற்றும் ஆராய்ச்சி வழங்கும் எய்ம்ஸ் (AIIMS), அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுத்த ISRO, தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான CSIR, அணு ஆய்விற்கான BARC, உயர்கல்வித் தரத்தைக் கட்டுப்படுத்தும் UGC போன்றவை அனைத்தும் நேருவால் உருவாக்கப்பட்டவை.

பண்டித நேரு அவர்கள், மத, மொழி, சாதி, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையை வலியுறுத்தினார். இந்தியா, அனைத்து பிரிவினங்களையும் அங்கீகரிக்கும் ஒரு குடியரசாக இருக்க வேண்டும் என்றே அவர் நம்பினார். அரசு மதச்சார்பற்றதாய் இருக்க வேண்டும் என்பதே அவருடைய கோட்பாடு. சர்வதேச ரீதியிலும் இந்தியாவை வலிமையான குரலாக நிலைநாட்ட விரும்பினார். உலக வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக, எந்த பக்கத்திலும் இணங்காத ஒரு சுதந்திர நிலைப்பாட்டை உருவாக்கினார். இதன் வெளிப்பாடாகவே, Non-Aligned Movement (NAM) எனும் அமைப்பை அவர் மற்ற நாடுகளுடன் சேர்ந்து உருவாக்கினார். இந்தியா எந்த வல்லரசின் பின்னணியிலும் இல்லாமல், தன்னிச்சையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்தது. இது நேருவின் கண்ணோட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற முக்கியத்துவமான நிகழ்வாகும்.

தற்போது நாட்டை இயக்கும் ஆர்;.எஸ்.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஜனநாயக அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகளை முற்றிலும் சீர்குலைக்கின்றன. பண்டித நேரு அவர்கள் தன்னாட்சி மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிறுவி ஜனநாயகம், கூட்டாட்சி, அறிவியல் மனப்பான்மையைப் பாதுகாப்பது முக்கியம் என்று மக்களுக்கு உணர்த்தினார். திட்ட கமிஷன், தேர்தல் ஆணையம், பல்கலைக்கழக மானிய ஆணையம், இந்திய வரலாற்று ஆராய்ச்சி சபை, ஒலிபரப்புத்துறை மற்றும் சாஹித்ய அகாடெமி போன்ற நிறுவனங்கள் இவற்றின் அடிப்படையில் செயல்பட்டன.

இன்று மோடி தலைமையிலான அரசு, அதிகாரத்தை மையப்படுத்துதல், கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அரசியலை புகுத்துதல், பணியாளர் நியமனங்களில் குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திட்ட கமிஷன் அகற்றப்பட்டு, பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் நிதி ஆயோக் நிறுவப்பட்டது, தேர்தல் ஆணையத்தின் நேர்மையும் செயல்பாடுகளும் சிக்கலுக்கு உட்பட்டுள்ளன. நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. NCERT மற்றும் ICHR போன்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் இந்துத்வா சிந்தனைகள் புகுத்தப்பட்டு, நேருவின் சாதனைகள் மறைக்கப்படுகின்றன.

ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

பண்டித நேருவும், மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கும், அவர்கள் கட்டி எழுப்பிய சமத்துவம், ஒற்றுமை, முன்னேற்றம் என்ற நாட்டின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடோ போன்ற சீரிய நடவடிக்கைகளால் இந்திய சமூகத்தில் ஒற்றுமை, நீதி மற்றும் அரசியலமைப்புப் பெருமைகளை காக்கும் எழுச்சிமிகு தலைவராக விளங்கி வருகிறார். இது ஒரு அரசியல் பயணம் மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ். கொள்கைக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பண்டித நேரு கனவு கண்ட ஒருங்கிணைந்த சமத்துவமிக்க இந்தியாவை கட்டியெழுப்புகின்ற நடவடிக்கையாகும். இதில் நாம் அனைவரும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருடன் இணைந்து, பண்டித நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவை கட்டிக்காக்க அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்.

(கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.)