அறிக்கை |29 April 2022
மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடி தொடர்புள்ள அமைப்பாக பஞ்சாயத்துராஜ் விளங்குகிறது. காந்தி கண்ட கனவின்படி பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் சுயாட்சி அதிகாரம் கொண்ட குடியரசாக செயல்பட வேண்டும் என்பதை செயல்படுத்தியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. காலப்போக்கில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் செயல்பட்டு வந்தது. இதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென்று முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பஞ்சாயத்துராஜ் நகர்பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.
பஞ்சாயத்துராஜ் ஆட்சிமுறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் விளங்குவது கிராமசபை. இங்கு எடுக்கின்ற முடிவின்படிதான் கிராம பஞ்சாயத்து செயல்பட முடியும். கிராம பஞ்சாயத்துகளுக்கு அடித்தளமாக விளங்குவது கிராமசபைகள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக் கூடிய கிராமசபை கூட்டங்களை இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தன்றும் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். கிராம சபைகள் தான் பஞ்சாயத்துராஜ் அமைப்பின் அடித்தளம் என்பதை இந்த அறிவிப்பு உறுதி செய்கிறது.
எனவே, வருகிற மே1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பங்கேற்கிற ஜனநாயகமான உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட அமைப்புகளாக பஞ்சாயத்து ராஜ் விளங்குகிறது. அதன் முதுகெலும்பாக இருந்து முடிவெடுக்கிற அதிகாரம் பெற்ற கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான திரு. செங்கம் ஜி. குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி