அறிக்கை | 29 May 2022
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30 ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறினார்கள். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ரூபாய் 5 லட்சம் கோடி கருப்புப் பணம் கைப்பற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதான் மோடியின் கருப்புப் பண ஒழிப்பினால் கிடைத்த பலனாகும்.
மோடி ஆட்சியில் ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரம் கோடி வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில், ரூபாய் 53 ஆயிரம் கோடி வரை ஏமாற்றிவிட்டு 23 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். இவர்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, பிரதமர் மோடிக்கு நெருக்கமான நிரவ் மோடி, மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக் கடன் 2014 இல் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூபாய் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன்மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, அடக்க விலையோடு 50 சதவிகிதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி வழங்கியது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியது. இதன்மூலம், குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை பறிக்கப்பட்டது. விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்கிற ஏகபோக உரிமை பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டு நடத்திய போராட்டத்தினாலும், ஐந்து மாநில தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
2024ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர், அதாவது, ரூபாய் 375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்திக் காட்டுவேன் என்று பலமுறை பிரதமர் மோடி உறுதிபடக் கூறியிருக்கிறார். தற்போதுள்ள 2.6 டிரில்லியன் டாலர், அதாவது ரூபாய் 193 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இந்தியாவின் வளர்ச்சி இரு மடங்காக உயர வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. முன்பிருந்த பத்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதம். மாறாக, எட்டு ஆண்டு மோடி ஆட்சியில் சராசரி வளர்ச்சி விகிதம் 4.75 சதவிகிதம் தான்.
அதேபோல், 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ. 77.81 ஆக சரிந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று 2014 தேர்தலில் மோடி பரப்புரையில் வாக்குறுதி கூறினார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 7.9 சதவிகிதமாக சரிந்துவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் 12.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மைய அறிக்கையின்படி, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கையின்படி, கிராமப்புறத்தில் 57 சதவிகிதமும், நகர்ப்புறத்தில் 80 சதவிகிதத் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். உதாரணத்திற்கு ரயில்வே துறையில் 90 ஆயிரம் கேங்க்மேன், ஸ்விட்ச்மேன் போன்ற வேலைகளுக்கு 2 கோடியே 80 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.
பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்றால், எத்தனை ஆண்டுகாலம் ஆகும் என்பதை பிரதமர் மோடிதான் விளக்க வேண்டும். மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எண்ணிலடங்காத துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வறுமை ஒழிப்பு குறித்து ஹின்ட் ரைஸ் பவுன்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையின்படி, 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றோடும் உறங்குகிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. 2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வறுமைக் குறியீடு அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது, குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து பல மடங்கு கூடியிருக்கிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 2022ஆம் ஆண்டிற்கான கோடீசுவரர்கள் பட்டியல் பல அதிர்ச்சி தகவல்களைத் தெரிவிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி, 100 பில்லியன் டாலரை – அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீசுவரர்கள் வரிசையில் 10-வது இடத்தை பிடித்திருக்கிறார். இத்தகைய வளர்ச்சி என்பது பிரதமர் மோடியின் ஆதரவினால் ஏற்பட்டது. பா.ஜ.க.வின் நிதி ஆதாரங்களுக்கு பின்புலமாக இருந்து ஆதரிக்கிற சில தொழிலதிபர்களில் முக்கிய பங்கு வகிப்பவர் அதானி. இது ஊழல் இல்லை என்றால், எது ஊழல்? கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாவலனாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இதனால் 2019 – 20இல் ரூபாய் 5 லட்சத்து 57 ஆயிரம் கோடி கார்ப்பரேட் வரி வருவாய் இருந்தது. அது 2020-21இல் ரூபாய் 4 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஒரே ஆண்டில் மட்டும் ரூபாய் 1.20 லட்சம் கோடி. பா.ஜ.க. ஆட்சியில் 142 தொழிலதிபர்களின் சொத்து 23 லட்சம் கோடியாக இருந்தது, கடந்த 2 ஆண்டுகளில் ரூபாய் 53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பா.ஜ.க. ஒரு கார்ப்பரேட் ஆதரவு கட்சி என்று கூறுவதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் பா.ஜ.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 27 லட்சம் கோடியை மத்திய பா.ஜ.க. அரசு வசூல் செய்திருக்கிறது. 2014 மே மாதத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 9.48. அது தற்போது ரூபாய் 27.90, டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆக இருந்தது. தற்போது ரூபாய் 21.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் 2014இல் ரூபாய் 400, தற்போது ரூபாய் 1015.50 ஆக விற்கப்படுகிறது. இவையெல்லாம் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளாகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டின் காரணமாக பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு ஆண்டு நன்கொடை என்ற போர்வையில் சட்டப்பூர்வமாகவே நிதி குவிந்து வருகிறது. 2019 தேர்தலுக்கு முன்பாக மொத்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை ரூபாய் 6,200 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் கிடைத்த தொகை ரூபாய் 3,600 கோடி. ஒரே ஒரு அறக்கட்டளை மட்டும் பா.ஜ.க.வுக்கு ரூபாய் 405 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி குவித்து வருவதால் தேர்தல் களம் சமநிலையற்றத் தன்மையாகவே இருந்து வருகிறது. இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன்வரவில்லை. ஏனெனில், அனைத்து அரசமைப்பு சட்ட நிறுவனங்களும் பா.ஜ.க.வின் கைப்பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் 3400 வகுப்புக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை விரிவுபடுத்த நாடு முழுவதும் வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ். விளம்பரமில்லாமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக உனோவ், ஹத்ரஸ், லக்கிம்பூர் கேரி, தலைநகர் டெல்லியில் சிறுபான்மை, தலித் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்குக் குறைந்தபட்சம் இரங்கலையோ, அனுதாபத்தையோ கூட தெரிவிக்காமல் செயல்பட்டது மோடி ஆட்சியின் கொடூரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
எனவே, பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 8 ஆண்டுகாலத்தில் நிறைவேற்றவில்லை. ஆனால், மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதையே மோடி ஆட்சி உறுதி செய்கிறது. எனவே, பா.ஜ.க.வின் ஆட்சி என்பது எண்ணிலடங்காத அவலங்களையும், துன்பங்களையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலமாக மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க பா.ஜ.க., எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
கே எஸ் அழகிரி