10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

30-April-2024

அறிக்கை

மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன. இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா ? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மக்களை திசைத் திருப்புவதற்கு புல்வாமா, பாலகோட் தாக்குதலை பரப்புரையில் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்து அரசமைப்புச் சட்ட தயாரிப்புக்குழுவின் தலைவராக நியமித்து அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் உருவாக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான மகாத்மா காந்தி;, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் தான். அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அரசமைப்புச் சட்டம் உருவாகியிருக்காது என்று டாக்டர் அம்பேத்கர் இறுதி உரையில் குறிப்பிட்டதை எவரும் மறுத்திட முடியாது.
அதேபோல, 1950 இல் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததும், தமிழகத்தில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த இடஒதுக்கீடு நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்ட போது, அதை எதிர்த்து போராடியவர் தந்தை பெரியார். இதிலுள்ள நியாயத்தை உணர்ந்த காமராஜர், பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி 1951 ஜூன் 2 ஆம் தேதி அரசமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் உறுப்பு 15 இல் உட்பிரிவு 4 சேர்க்கப்பட்டது. இதன்படி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய குடிமக்களுக்கு வழங்கும் இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் நேரு கொண்டு வந்த முதல் திருத்தத்தின் மூலமே இந்தியாவில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது.
இதன்படி இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டுகிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்யப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. அதனடிப்படையில் தான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுகளின் மூலம் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவி வகிக்கிற அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019 இல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024 இல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியின் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்.
தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ