70 ஆண்டுகள் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை விற்பதா?
* கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறும் பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் 70 ஆண்டுகளில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனச் சொத்துகளை 7 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பை குத்தகைக்கு விடுகிறோம் என கூறுகின்றனர். இந்த அரசாங்கத்தால் பொருளாதாரத்தை தெளிவாகக் கையாளத் தெரியவில்லை. விவசாயிகளின் உரிமையைப் பறிக்க 3 சட்டங்களை கொண்டு வந்ததுபோல், இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்க பொதுத் துறை நிறுவனங்களை விற்க முடிவு செய்துள்ளனர்.. தன் தொழிலதிபர் நண்பர்களுக்கு அரசின் பொதுத் துறை நிறுவனங்களை தாரை வார்க்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
* ரூ. 1.6 லட்சம் கோடி மதிப்புள்ள 26,700 கி.மீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை, ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள 400 ரயில் நிலையங்கள், 150 தனியார் ரயில்கள், ரயில் பாதை மற்றும் சேமிப்புக் கிடங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. அதோடு, 42,300 சர்க்யூட் கி.மீ தொலைவுக்கான மின் பாதை, 6 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி, என்ஹெச்பிசி, என்டிபிசி மற்றும் என்எல்சி ஆகியவற்றுக்குச் சொந்தமான சோலார் காற்றாலை சொத்துகளும், கெயில் நிறுவனத்தின் 8 ஆயிரம் கி.மீ தொலைவுக்கான தேசிய கேஸ் பைப்லைனும் தற்போது தனியார் மயமாக்கப்படவுள்ளன. மேலும், 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கான பெட்ரோலிய பைப்லைன்களும், பாரத் நெட் ஃபைபர் நெட்வொர்க், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் டவர்கள் போன்ற 2.8 லட்சம் கி.மீ தொலைவுக்கான தொலைத்தொடர்பு சொத்துகளும், 210 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ரூ.29 ஆயிரம் கோடி மதிப்புள்ள சேமிப்புக் கிடங்குகள்,107 நிலங்கரி சுரங்கங்கள், 761 கனிம வள மண்டலங்கள், ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 25 விமான நிலையங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் 31 திட்டங்களுடன் சேர்த்து ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள துறைமுகங்கள், ரூ.11 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 தேசிய ஸ்டேடியங்கள் ஆகியவற்றை சில தொழிலதிபர்களுக்கு பரிசாகக் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
* முக்கிய துறைகளை தனியார் மயமாக்கி வேலை வாய்ப்புகளைப் பறிப்பதே மோடி அரசின் திட்டம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனியார்மயத்துக்கு எதிராக இருந்ததில்லை. ஆனால், விரிவாக விவாதித்து, ஆய்வு செய்ததின் அடிப்படையில் தான் தனியார் மய முடிவை எடுத்திருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும், ஏராளமானோர் பயன்படுத்தும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க நாங்கள் ஒருபோதும் வியூகம் அமைத்ததில்லை.
* மூலோபாய சொத்துகளை விற்கக்கூடாது. ஆனால், மோடி அரசு வெளியிட்டுள்ள விற்பனைப் பட்டியலில் பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே துறையும் இடம்பெற்றுள்ளன. நீண்ட காலம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மட்டுமே தனியார்மயமாக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏகபோகங்கள் உருவாக்கப்படும் என்ற ஆபத்து இருந்ததால், எல்லா நிறுவனங்களையும் நாங்கள் தனியார்மயமாக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்பதற்கான குறிக்கோள்கள் என்ன என்பதையும், அதன் அளவுகோலையும் அரசு வெளியிட்டிருக்க வேண்டும். இதனைச் செய்யாமல் இவ்வளவு பெரிய பரீட்சார்த்த சோதனையைச் செய்யக் கூடாது. பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ரயில்வே தொழிற்சங்கங்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டதா? துறைமுகத் தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதா? விவசாயிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டதா? இவற்றை எல்லாம் ரகசியமாக வைத்திருக்கிறது அருமையான அமைப்பான நிதி ஆயோக்.
* 4 ஆண்டுகளுக்கான 1.5 லட்சம் கோடி நிதியை திரட்ட 70 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தான் விற்க வேண்டுமா? கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய உள்கட்டமைப்புக்காக ரூ. 100 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி மீண்டும் ரூ.110 லட்சம் கோடியை அறிவித்தார். இறுதியாக 2021 ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் ரூ.100 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வதைப் போல், பொதுத்துறை நிறுவனங்களை விற்று 4 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாயை வசூலிப்பதாகவே வைத்துக் கொண்டால், நீங்கள் கூறும் ரூ.100 லட்சம் கோடி அடிப்படை உள்கட்டமைப்பை இந்த வருவாயிலிருந்து எப்படிச் செலவிட முடியும்?.
* உங்கள் வீட்டை ஒருவருக்கு 40 ஆண்டுகளுக்கு தரப்போகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? 40 ஆண்டுகளுக்குப் பிறகு தான் அந்த வீட்டைப் பற்றி பேச முடியும் என்று அர்த்தம். 25 விமான நிலையங்களை ஒரு நபருக்கு கொடுத்தால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டம் முடிந்து போயிருக்கும். பொதுத் துறை நிறுவனச் சொத்துகள் விற்பனை செய்யப்படுகின்றனவா? அல்லது பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது கேள்வி அல்ல, யார் கட்டுப்பாட்டில் அந்த சொத்துகள் இருக்கும் என்பது தான் கேள்வி. பொதுத்துறை நிறுவனச் சொத்துகளை தனியார் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாகக் கொண்டு வர விற்பனை செய்கிறார்கள். நாங்கள் விற்பனை செய்கிறோம் என்று சொல்ல அவர்களுக்குத் தைரியம் இல்லை. அதனால் தான் 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுகிறோம் என்கிறார்கள். 400 ரயில் நிலையங்களை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த சொத்துகள் யாரிடம் போகப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
* நமது பொருளாதார அமைப்பில் பல கூறுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை முறைசார்ந்த துறை மற்றும் முறைசாரா துறை. இந்த இரு துறைகளும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. முறைசாரா துறையை ஒழிக்க இந்திய பிரதமர் பல்வேறு வழிகளைக் கையாண்டு கொண்டிருக்கிறார். முறைசார்ந்த துறையை தனியார் மயமாக்கி முறைசாரா துறையைக் குழியில் புதைக்க மோடி முயற்சி செய்கிறார். நாட்டின் ஏகபோகங்களை உருவாக்குவது ஆபத்தானது. இதைத் தான் நாம் கிழக்கிந்திய கம்பெனியிடம் பார்த்தோம். ஏகபோகம் மூலம் தான் அவர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள். இப்போதும் அதேபோன்ற அடிமைத் தனத்துக்கு நம்மை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
* விவசாயத்தின் முறைசார்ந்த துறையை அழிக்க 3 விவசாயச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர். பெருமளவு ஏகபோகத்தால் நாட்டையே மாற்றிவிடலாம் என்று மோடி நம்புகிறார். ஏகபோகத்தை ஊக்குவித்தால், உங்களால் வேலை கொடுக்க முடியாது. அது சமூகப் பதற்றம், சமூக கோபம் மற்றும் சமூக போராட்டங்களுக்கு அது வித்திடும்.