இன்று (16 அக்டோபர் 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

இன்று (16 OCT 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்:

காரிய கமிட்டி உறுப்பினர்களே!

உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து இந்த கூட்டத்தை நடத்த விரும்பினேன். தற்போது நாம் எல்லோருமே இரு தவணைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறோம். முகக்கவசம் அணிந்து நாம் எல்லோரும் நேரில் சந்திக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்த நேரத்தில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் விரைந்து பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்.

விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் தொடர் போராட்டம் நடத்தும் சூழலில் நாம் சந்திக்கிறோம். கடந்த ஓராண்டுக்கு முன்பு 3 கறுப்புச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதிலிருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சட்டங்களை சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்த நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்தோம். ஆனால், சில தனியார் நிறுவனங்கள் பயனடையும் வகையில் 3 விவசாய சட்டங்களையும் மோடி அரசு நிறைவேற்றியது. போராட்டக் களத்தில் குதித்த விவசாயிகள், அப்போதிலிருந்து சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்தில் லக்கிம்பூர்-கேரி சம்பவம் பா.ஜ.க.வின் மனநிலையை வெளிப்படுத்தியது. விவசாயிகளின் பிரச்சினைகளை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்பதையும், விவசாயிகள் தங்கள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நடத்தும் இந்த உறுதியான போராட்டத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையும் பார்த்தோம்.

பொருளாதாரச் சூழல் நன்றாக இருப்பதாக நம்மை நம்ப வைக்க அரசு பிரச்சாரம் செய்தாலும், நிலைமை கவலை தரும் வகையில் தான் இருக்கிறது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே பதில், பல ஆண்டுகளாக பெரும் முயற்சியுடன் கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துகளை விற்றுவிடுவது தான். பொதுத்துறை நிறுவனம் என்பது வெறும் வியூகமோ, பொருளாதார சாராம்சமோ மட்டும் கொண்டதல்ல. அது சமூக இலக்கு சார்ந்தது. எஸ்சி., எஸ்டி., மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் வளர்ச்சி சார்ந்தது. ‘விற்பனை, விற்பனை, விற்பனை’ என்ற மோடி அரசின் ஒற்றை நிரல் ஆபத்தானதாக இருக்கிறது. இதற்கிடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலை-உணவும் மற்றும் எரிபொருட்கள் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 க்கும் விற்கும் என்று நாட்டில் உள்ள எவரேனும் ஒருவர் கற்பனை செய்தாவது பார்த்திருப்பாரா? சமையல் கேஸ் விலை ரூ.900 ஆக உயர்ந்து விட்டது. சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.200 ஐ நெருங்கிவிட்டது. இவையெல்லாம் நாட்டு மக்களை வாழவே முடியாத சூழலுக்குத் தள்ளியுள்ளன.

கடைசியாக நாம் சந்தித்தபோது, தடுப்பூசி கொள்முதல் கொள்கையை இந்தியா மாற்றிக் கொண்டது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப தடுப்பூசி கொள்கை மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்படியிருந்தும் கூட்டுறவு கூட்டாட்சி என்பது ஒரு முழக்கமாகவே இருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநிலங்களைப் பாகுபாட்டோடு தான் மத்திய அரசு அணுகியது.

சமீப காலமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் படுகொலைகள் நடக்கின்றன. சிறுபான்மையினர் குறிவைத்து கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இன்று காலை நாம் கண்டித்தோம். ஜம்முவும் காஷ்மீரும் யூனியன் பிரதேசமாகி 2 ஆண்டுகளாகிறது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான குற்றங்களைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது மத்திய அரசின் முழுப் பொறுப்பாகும். ஜம்மு காஷ்மீரில் மக்களிடையே சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பது மோடி அரசாங்கத்தின் கையில் உள்ளது.

நம் நாட்டின் வெளியுறவு மற்றும் அண்டை நாடுகளுடனான கொள்கை குறித்து எப்போதும் பரந்த ஒருமித்த கருத்து இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் நம்பிக்கை வைக்கத் தயக்கம் காட்டுவதால், அந்த ஒருமித்த கருத்துக்கும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் அணி திரட்டல் மற்றும் துருவ முனைப்பின் தீய கருவியாக வெளியுறவுக் கொள்கை மாறியுள்ளது. நம் நாட்டின் எல்லையில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம். இந்தியாவில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறிய பிரதமர், அதன்பிறகு அமைதி காப்பது நம் நாட்டுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தும்.

இப்போது சட்டப்பேரவை தேர்தல்களை நோக்கித் திரும்பியுள்ளோம். சந்தேகத்துக்கு இடமின்றி நாம் ஏற்கெனவே தேர்தலுக்குத் தயாராகிவிட்டோம். கட்சியின் நலனில் மட்டும் அக்கறை செலுத்தினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் கண்ணியத்துடன் இருந்தால் நிச்சயம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இது குறித்து தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களின் பொதுச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும் விளக்குவார்கள். நான் ஏதும் சொல்லவிரும்பவில்லை.

இறுதியாக கட்சியின் அமைப்புத் தேர்தலுக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியை சீரமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அமைப்பும் விரும்புகிறது. இதனைச் செயல்படுத்த ஒற்றுமையும் கட்சியின் நலனும் அளவுகோலாகவும் இருக்க வேண்டும். இடைக்கால தலைவராக இருக்கும் நான், மீண்டும் தலைவராக வேண்டும் என்று 2019 ஆம் ஆண்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கேட்டுக் கொண்டது என் நினைவில் உள்ளது. அதன்பிறகு, 2021 ஜூன் 30 ம் தேதிக்குள் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான திட்டத்தை நீங்கள் இறுதி செய்தீர்கள். எனினும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இதற்கான அவகாசம் கடந்த மே 10 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது. இது குறித்த தெளிவான நிலையைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. முழு அளவிலான கட்சி தேர்தல்களுக்கான அட்டவணை உங்கள் முன்பு உள்ளது. இது குறித்த முழு செயல்முறையையும் வேணுகோபால் உங்களுக்கு பின்னர் விளக்குவார்.

சொல்லப்போனால் நான் காங்கிரஸ் தலைவராக முழுநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் கட்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் தலைமை வகித்த நமது சகாக்கள் குறிப்பாக, இளைஞர்கள் உள்ளனர். விவசாயிகள் போராட்டம், கொரோனா நிவாரணம் வழங்குதல், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீதான அக்கறை, தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மை மீதான கொடுமைகளை எதிர்த்து போராட்டம், விலைவாசி உயர்வு மற்றும் பொதுத்துறை அழிவு குறித்து இவர்கள் போராடியிருக்கிறார்கள். பொது முக்கியத்துவம் மற்றும் அக்கறை கொண்ட பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் கவனிக்காமல் விட்டதில்லை. டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் போல், இந்த பிரச்சினைகளை எல்லாம் நானும் பிரதமரிடம் கொண்டு சென்றுள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாங்கள் தேசிய பிரச்சினைகளில் கூட்டாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் எங்கள் வியூகம் ஒரே மாதிரியாக இருந்தது.

வெளிப்படைத்தன்மையை நான் எப்போதும் பாராட்டுவேன். ஊடகங்கள் வழியே என்னுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரமான மற்றும் கவுரமான விவாதத்தை நாம் நடத்தலாம். ஆனால், இந்த அறையின் நான்கு சுவர்களுக்குள் காரிய கமிட்டி எடுத்த கூட்டு முடிவைத்தான் வெளியே வெளிப்படுத்த வேண்டும்.

– இவ்வாறு அன்னை சோனியா காந்தி பேசினார்.