இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மீலாது நபி திருநாள் வாழ்த்துச் செய்தி

இறை தூதரான நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம் முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்த பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய பெருமக்களின் திருமறையான திருக்குர்ஆன் நபிகள் நாயகம் மூலமாகத் தான் மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களை நன்னெறிப்படுத்துகிற வகையில் இத்திருமறை அமைந்துள்ளது.

மதச்சார்பற்ற கொள்கைகளில் நம்பிக்கையுள்ள கட்சிகள் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஆதரவாக குரல் கொடுத்து பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், மிகமிகச் சோதனையான  காலகட்டத்தில் இவர்கள் வாழ வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவலையைத் தருகிறது.

நபிகள் நாயகம் போதனைகளின்படி, அனைத்து மக்களிடையேயும் அன்பையும், ஏழை, எளிய மக்களிடம் பரிவையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் வகுப்புவாத சக்திகளின் பிளவு அரசியலை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். அழகிரி