அறிக்கை | 11 June 2022
சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ள மனைவி கமலா நேருவின் நகைகளை அடமானம் வைத்து நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை நேரு நடத்தினார். இந்த செய்தித்தாளுக்கு பெரோஸ் காந்தி ஆசிரியராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸின் குரலாக மாறிய நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை அசோசியேட்டடு ஜர்னல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டது. இது இந்தியில் நவ்ஜீவன் மற்றும் உருது மொழியில் குவாமி அவாஜ் ஆகிய செய்தித்தாள்களையும் வெளியிட்டது.
இந்த செய்தித்தாளின் பங்குதாரர்களாக நேரு உள்ளிட்ட ஐந்தாயிரம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்தனர். ரூ.90 கோடி அளவுக்குக் கடன் ஏற்பட்டதால் இந்த 3 செய்தித்தாள்களும் 2008 ஆம் ஆண்டு முதல் வெளியாகவில்லை. 2010 ஆம் ஆண்டு பங்குதாரர்களின் எண்ணிக்கை 1,057 ஆகக் குறைந்தது. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி 3 செய்தித்தாள்களையும் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தி கம்பெனியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 76 சதவிகித பங்குதாரர்கள். மீதமுள்ள 24 சதவிகிதப் பங்குகளை மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோராவும், ஆஸ்கர் பெர்ணான்டசும் வைத்திருந்தனர். அனைத்துப் பரிவர்த்தனைகளும் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையாகவுமே நடந்துள்ளன.
அசோசியேட்டடு ஜர்னல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துகளை யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட்டுக்கு மாற்றியதில் பணம் மோசடி நடந்துள்ளதாக கடந்த 2012 ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தில் தனி புகாரை சுப்பிரமணியன் சாமி அளித்தார். அதன்பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இந்த வழக்கை அமலாக்கத்துறை மூலம் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி வருகிறது.
யங் இண்டியன் பிரைவேட் லிமிடெட் என்பது அறக்கட்டளையாகத் தான் தொடங்கப்பட்டது. எந்த லாப நோக்கத்துக்காகவும் தொடங்கப்படவில்லை. ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு, 2 பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டும் சலுகை, விலைவாசி உயர்வு, ஜிடிபி வீழ்ச்சி, சீன ஊடுருவல் மற்றும் நாட்டில் நடக்கும் சமூக பாகுபாடுகளை காங்கிரஸ் கட்சி மட்டுமே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே இந்த வழக்கை பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருக்கிறது.
இதில் எந்தப் பணப்பரிமாற்றமும் சம்பந்தப்படாத நிலையில் பணமோசடி வழக்கு என்பது விசித்திரமாக இருக்கிறது. பழிவாங்கல், அற்பத்தனம், மலிவான அரசியலை சுப்பிரமணியன் சாமியை ஏவிவிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டங்களை மதிக்கிற கட்சி. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை, பல்வேறு வழக்குகளிலிருந்து அமித்ஷா ஓடி ஒளிந்ததை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வழக்கிலிருந்து ஓடாமல் 10 ஆண்டுகளாக சட்ட ரீதியாகச் சந்தித்து வருகிறது. சத்தியத்தின் பாதையை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதைக் காங்கிரஸிடமிருந்து பா.ஜ.க. பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை யங் இந்தியா நிறுவனம் வாங்கியது ஒரு சாதாரண வர்த்தக நடவடிக்கைதான். இதில் நம்பிக்கை மோசடிக்கோ, குற்றச் சதிக்கோ அல்லது யாரையும் ஏமாற்றியிருப்பதற்கோ இடமில்லை. தனிப்பட்ட நிறுவனத்தின் பணப்பரிமாற்றங்கள் மீது சம்பந்தமில்லாத நிலையிலும், மூன்றாம் நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத சூழலில் எவரும் கேள்வி எழுப்ப முடியாது என ஏற்கெனவே பல நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் முன்னுதாரணமாக உள்ளன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை அபகரிக்க அமலாக்கத்துறையை கைப்பாவையாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இது காங்கிரஸ் கட்சியின் மீது தொடுக்கப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் போக்கு. பா.ஜ.க.வின் இத்தகைய மிரட்டலைக் கண்டு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது. பா.ஜ.க.வின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தும் பணியை காங்கிரஸ் தொடர்ந்து செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியில் நடைபெற்று வரும் மோடி ஆட்சியை எதிர்த்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வரும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரின் செயல்பாட்டை முடக்குவதற்காக, பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மூலம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக சட்டவிரோத நடவடிக்கையாகும். மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கை கண்டிக்கும் வகையில், எனது தலைமையில், சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பாக, 13.6.2022 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
கே.எஸ். அழகிரி