அறிக்கை | 02 June 2022
தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்தநாள் விழா, முதல் முறையாக அரசு விழாவாகவும், மக்கள் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலுள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு அவர் விட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிற முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்முறையாக மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிற நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
தமது வாழ்வில் 80 ஆண்டுகாலம் கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் தனித்துவமிக்க ஆளுமையை வெளிப்படுத்தியவர் கலைஞர் அவர்கள். தமது அரசியல் வாழ்க்கையில் எப்போதும் எதிர்நீச்சல் போட்டவர். எழுத்தாளராக, வசனகர்த்தாவாக, பேச்சாளராக, கட்சியின் தலைவராக, முதலமைச்சராக, அரசியல் வியூகம் வகுக்கும் ஆற்றல்மிக்கவர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல முன்னொருவரில்லை, பின்னொருவரில்லை.
இந்திய அரசியலில் மிக சோதனையான காலக்கட்டத்தில் அன்னை இந்திரா காந்தியோடு கூட்டணி அமைக்க சென்னை கடற்கரையில் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று அழைப்பு விடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட 1980 இல் அரசியல் வியூகம் வகுத்தவர் கலைஞர். அதேபோல, வகுப்புவாத சக்திகளின் ஆட்சியை மத்தியில் அகற்றிட 2004 இல் அன்னை சோனியா காந்தி அவர்களை ‘தியாகத்தின் திருவிளக்கே’ என்று அழைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய பெரும் துணையாக இருந்தவர் கலைஞர். எந்த முடிவெடுத்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு உறுதியாக எடுத்து அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்தவர். தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிக் காவலராக விளங்கியவர் கலைஞர்.
மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், நிர்வாக பயிற்சி பெற்று இன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைவரும் போற்றுகிற வகையில் மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சியின் மூலம் எண்ணிலடங்கா திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். ஓராண்டில் பத்தாண்டுகால பணிகளை செய்து முடித்து சாதனை படைத்திருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களது ஆட்சி பீடுநடை போடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொடர்ந்து நிலைத்திட அவர் பிறந்தநாளில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மனப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே.எஸ். அழகிரி