“வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிற கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 இல் இருந்து 20 லட்சம் வரை வழங்குவேன் என்று பேசினாரே ? பேசியபடி செயல்பட்டாரா ? ” – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 02-August-2023

தமிழகத்தில் பா.ஜ.க. கட்சியை வளர்க்க பல்வேறு உத்திகளை கடந்த காலத்தில் கையாண்டு வந்தனர். ஆளுநரின் ஆதரவோடு மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்தனர். ஆனால், அது மக்களிடையே வெறுப்பை வளர்த்து பா.ஜ.க.வின் வளர்ச்சியைப் பாதிக்கிற நிலைக்குச் சென்று விட்டது. தற்போது பா.ஜ.க.வை வளர்க்க அண்ணாமலை இராமநாதபுரத்திலிருந்து நடக்கத் தொடங்கியிருக்கிறார். அவரது நடைப்பயணம் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதை நாள்தோறும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அண்ணாமலையின் நடைப்பயணம் டெம்போ டிராவலாகவும், சொகுசு பேருந்து பயணமாகவும் மாறியிருப்பதைப் பார்த்து மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.

தமது நடைப்பயணத்தில் அண்ணாமலை பேசும் போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். தமிழ்நாடு அரசின் கடனை குஜராத் அரசோடு ஒப்பிடுகிறார். அண்ணாமலையின் முதுகு அவருக்குத் தெரியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு 9 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்கிறது என்பதை அண்ணாமலை அறிவாரா ? 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கு முன் இந்தியாவை 67 ஆண்டுகளாக 14 பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் வைத்து விட்டுச் சென்ற கடன் தொகை ரூபாய் 55 லட்சம் கோடி தான். ஆனால், 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இத்தகைய பெரும் கடன் சுமைக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே காரணம்.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 169 லட்சம் கோடி. கடந்த 9 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு இந்தியாவின் கடன் உயர்ந்திருக்கிறது. ஒரு நாட்டின் கடன் என்பது அந்த நாட்டின் மக்கள் தலையில் தான் விழுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது 2014-க்கு முன் இந்திய குடிமகன் ஒருவர் மீது சராசரியாக ரூபாய் 43,000 கடன் இருந்தது. ஆனால், அது தற்போது ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சுமார் இரண்டரை மடங்கு ஒரு தனிநபர் மீதான கடன் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில் தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் இவ்வளவு கடனை சுமக்க வைப்பது தான் மோடி மாடல் ஆட்சியா ?

தமிழகத்தின் கடன் சுமையை குஜராத் மாநிலத்தோடு ஒப்பிடுகிறார். தமிழகத்தில் கடன் யார் ஆட்சியில் எவ்வளவு அதிகரித்தது என்பதை அரைகுறை அண்ணாமலை ஆய்வு செய்யாமல் அவதூறான கருத்துகளைப் பரப்பலாமா ? 2001 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலிருந்து வெளியேறும் போது 34,540 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் அளவு 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலம் நிறைவடையும் போது 63,848 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. 5 ஆண்டு காலத்திற்குள் கடன் அளவு சுமார் 84 சதவிகிதம் அதிகரித்தது. இதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா ?

2006 ஆம் ஆண்டில் ஆட்சியை அ.தி.மு.க. பறிகொடுத்த பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதன் 5 ஆண்டு நிறைவில் அதாவது 2011 ஆம் ஆண்டில் ஆட்சியை விட்டு விலகும் போது 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆனால், தமிழக அரசின் கடன் 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து 2016 முதல் 2021 வரை அ.தி.மு.க.வின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 4.85 லட்சம் கோடி ரூபாயாக தமிழகத்தின் கடன் அளவு அதிகரித்தது. பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழக அரசின் நிதிநிலைமை திவாலான நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனவே, மக்கள் பேராதரவோடு ஆட்சியில் அமர்ந்து 27 மாதங்களாக மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி நாள்தோறும் நிறைவேற்றி வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவிகிதத்தை 27 மாதங்களில் நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறது. ஆனால், 2014 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் மோடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டனவா ? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதே ? கடந்த 9 ஆண்டுகளில் 18 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டதா ? விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டுவேன் என்று மோடி வாக்குறுதி கொடுத்தாரே ? குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று அறிவித்தாரே ? 2013 நவம்பர் 7 ஆம் தேதி சத்தீஸ்கரில் நரேந்திர மோடி பேசும் போது வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிற கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 இல் இருந்து 20 லட்சம் வரை வழங்குவேன் என்று பேசினாரே ? இதை எவராவது மறுக்க முடியுமா ? பேசியபடி செயல்பட்டாரா ? கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத மோடி ஆட்சியின் சாதனைகள் என்று கூறுவதற்கு என்ன இருக்கிறது ? அண்ணாமலை அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.