இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

03-Jan-2025

அறிக்கை

சமீபத்தில் மறைந்த உலகத்தின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக கருதப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார். இதில் திராவிடர் கழக தலைவர் திரு. கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன், எம்.பி., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்துகிறார்கள்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. சு. திருநாவுக்கரசர், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவில் புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று மகத்தான சாதனைகளை படைத்த டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழர்கள் நன்றிப் பெருக்கோடு பெருமளவில் பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை தலைமையேற்ற டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழுக்கு செம்மொழித் தகுதி, சேது சமுத்திர திட்ட அனுமதி, சென்வாட் வரி ரத்து, நெடுஞ்சாலைத்துறையில் வரலாறு காணாத வகையில் நிதியும், திட்டங்களும் அறிமுகம், அதன்மூலம் எண்ணற்ற மேம்பாலங்கள், ரயில்வே துறையில் புதிய திட்டங்கள் அறிவிப்பு என மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இதைத் தவிர தகவல் அறியும் உரிமைச் சட்டம், அனைவரும் கல்வி பெறுகிற உரிமை, 82 கோடி மக்கள் உணவு தானியம் பெருகிற உரிமை, விவசாயிகள் நலனை பாதுகாக்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், கல்விக்கடன், விவசாயிகளுக்கு கடன், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்று சாதனைகளை படைத்தவர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள். அவருக்கு செலுத்தப்படுகிற அஞ்சலியின் மூலம் தமிழக மக்கள் நன்றிப் பெருக்கை வெளிக்காட்டுகிற வகையில் இக்கூட்டம் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மகனுமான திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மாணவர் காங்கிரஸ் தலைவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருமுறை பதவி வகித்த பெருமை திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு உண்டு. அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்ததால் இருபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை நெஞ்சுறுதியோடு துணிச்சலுடன் எதிர்கொண்டவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள். தமிழகத்தில்; காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவருக்கு அஞ்சலி செலுத்துகிற கூட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல, 7.1.2025 அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில் நேரு – அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன், எம்.பி., இந்து குழும தலைவர் திரு. என். ராம், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் திரு. சுப. வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றுகிறார்கள். இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய முன்னாள் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்று பெல்காமில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் என்ற முழக்கங்களை எழுப்பி காந்தியடிகளையும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் கருத்தியல் ரீதியாக ஒருங்கிணைக்கிற முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிற வகையில் இக்கூட்டம் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 

– தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ