தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 03 Feb 2022

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருமுறை நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  ஆனால், அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் தராத காரணத்தால் எந்த பலனும் ஏற்படவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பற்றிய பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை பெறப்பட்டது. இதற்கான சட்ட ஆலோசனைகளையும் இக்குழு வழங்கியது.

இக்குழுவின் பரிந்துரையின் பேரில், கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் பெறுகிற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு கோரும் மசோதா கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், தற்போது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

நேற்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நீட் குறித்து பேசும் போது, மத்திய அரசின் போக்கை கடுமையாக விமர்சனம் செய்தார். இக்கருத்திற்கு எதிர்வினையாக்குகிற வகையில் தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். தமிழக சட்டமன்றத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளை உதாசீனப்படுத்துகிற ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கே.எஸ். அழகிரி